தாம்பரம் ரயில் நிலையத்தில் போக்குவரத்து சீரானது… அகலப்படுத்தப்பட்ட நடைமேடைகள்… புதிய இருக்கைகள்…செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் என்னென்ன?
சென்னை கடற்கரையில் இருந்து – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.
இதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகின்றன. குறிப்பாக சொல்வதானால், தென்சென்னை மக்களுக்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கிய பொது போக்குவரத்தாக விளங்குகிறது.
அந்த வகையில் தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது ரயில் நிலைய முனையமாக செயல்பட்டு வருகிறது. இதனை கருத்தில்கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தாம்பரம் பணிமனையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல், சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட மறு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கின.
ரத்து செய்யப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள்
இந்த பணிகள் முதலில் கடந்த 14 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதற்கேற்ற வகையில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால், பராமரிப்பு பணியை முழுவதுமாக முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. இதன் காரணமாக, கூடுதாக மேலும் 4 நாட்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள கடந்த 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மின்சார ரயில் ரத்து நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் 59 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதேபோன்று, பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
சிரமத்தை சந்தித்த பொதுமக்கள்
இதனால், செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டனர்.குறிப்பாக அலுவலகங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவித்து போயினர். மாற்று வழியாக, சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன. எனினும், ஜி.எஸ்.டி.சாலையில் நெரிசல் என பேருந்து சேவையிலும் பொதுமக்கள் 16 நாட்கள் சிரமத்தோடு கடந்து சென்றனர்.
வழக்கம்போல் தொடங்கிய ரயில் சேவைகள்
இந்நிலையில், நேற்றுடன் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் முழுவதும் நிறைவுற்று, பிற்பகல் முதல் வழக்கம் போல் ரயில் சேவைகள் தொடங்கியது.நடைமேடை 7 மற்றும் 8 ஆகியவற்றை அகலப்படுத்தி, புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு, 24 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்ல பேட்டரி வாகனம் இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
9 மற்றும் 10 ஆவது நடைமேடைகளை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் முழுமையாக நிறைவுபெற்றது. புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, நடைமேம்பாலமும் கட்டி முடிக்கபட்டுள்ளது. தண்டவாளங்கள் “கிராஸ் டிராக்” கில் விரைவு ரயில் முன்பு செல்லும் போது 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், தற்போது அது 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் புதுபிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.