முகம் மாறும் வட சென்னை… மாதவரத்தில் விரைவில் உருவாகும் டெக்சிட்டி … வேலைவாய்ப்புகள் பெருகும்!
சென்னையில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் பயிற்சி மாநாட்டை (யுமாஜின்) காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், “தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் பகுதிகளில் ‘டெக் சிட்டி’ ( Tech City) என அழைக்கப்படும் தொழில்நுட்ப நகரங்களை தமிழக அரசு தொடங்கும். இந்த நகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும், தொழில்முனைவோரையும் ஒன்றிணைக்கும் மையங்களாக விளங்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, சென்னை, மாதவரம் தாலுகாவில் 150 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, டெக் சிட்டியை உருவாக்குவதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ ( TIDCO) கோரியுள்ளது.
வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டம்
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மாதவரத்தில் அமைய உள்ள இந்த டெக் சிட்டி, அலுவலகத்துக்கான அமைவிடங்களும், குடியிருப்புகளும் இணைந்த வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு திறன்மிகு, புத்தாக்க மையங்கள் உலகத்தரத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நகரத்தில், தரவு மைய பூங்கா மற்றும் உலகத்தரத்திலான புத்தாக்க மையம் ஆகியவையும் அமைகிறது. இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை, பின்டெக், டீப்டெக் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்காகவும் இந்த டெக் சிட்டி உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ELCOT) மூலம் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்வதற்காக ஒரு ஆலோசகரை நியமிக்க இருப்பதாக டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு அம்சங்கள்
இந்த தொழில்நுட்ப நகர வளாகத்தில், அலுவலகம், குடியிருப்பு, வர்த்தக மையங்கள் நடந்து செல்லும் தூரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில் உள்ள தரவு மையப்பூங்கா, அதிநவீன கணினி, போதிய சேமிப்பு தளம், பல நிலைகள் கொண்ட பாதுகாப்பு வசதி, பேரிடர் மீட்பு வசதி, குறைந்த மின் பயன்பாடு, அதிவேக இணைய வசதி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். முதல் தர அலுவலக வளாகம் அனைத்து கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த நகரத்தில் உருவாக்கப்படுவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டம் மூலம் வட சென்னையில் தொழில்நுட்பங்கள் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகவும், இப்பகுதியில் அலுவலக இடங்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த டெக் சிட்டியில் குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்காக்கள், விளையாட்டு வளாகம், பொழுதுபோக்கு பகுதிகள் ஆகியவை அமையும். மேலும், ஒருங்கிணைந்த சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை வசதிகள் உள்ளிட்டவை அமைந்திருக்கும். இதுதவிர, ஷாப்பி்ங் மால்கள், சில்லறை விற்பனைக் கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் உருவாகி, பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், அது வட சென்னை மீதான பிம்பத்தையே மாற்றி, சென்னையின் இன்னொரு ஹைடெக் சிட்டியாக மாறிவிடும் என்பது நிச்சயம்!