பயணிகள் கவனத்திற்கு… தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!
திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 29 விரைவு ரயில்களின் சேவையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில விரைவு ரயில்களின் சேவையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்
அதன்படி, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் (20666) ஆகஸ்ட் 16 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதிகை எக்ஸ்பிரஸ்
செங்கோட்டையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பொதிகை அதிவிரைவு ரயில் (12662), செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில், அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
நெல்லை எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலியிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் நெல்லை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில், செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரியிலிருந்து வரும் 15 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.
கன்னியாகுமரியிலிருந்து வரும் 14 ஆம் தேதி மாலை 6 15 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ஆகிய மாற்றுப்பாதை வழியாக டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும்.
காரைக்கால் எக்ஸ்பிரஸ்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரயில் வரும் 15 ஆம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.