அமெரிக்க பயணத்துக்கு தயாராகும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்… பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!

மிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தன. இந்த முதலீடுகள், தமிழகத்திற்கு வருவதன் மூலமாக 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இதில் 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கான திட்டங்கள், அவர் அமெரிக்காவில் யார் யாரை சந்தித்துப் பேச வேண்டும், எந்தெந்த தொழில் நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தயார் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசு அனுமதி

இதனையடுத்து, வருகிற சுதந்திர தினத்தன்று 15 ஆம் தேதி கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதலமைச்சர் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி 15 நாள் பயணமாக, ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று அமெரிக்கா புறப்படுவது எனப் பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆகஸ்ட் 27 ல் அமெரிக்கா பயணம்

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத் திட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குப் பதிலாக, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். 15 நாட்கள் அமெரிக்காவில் இருப்பது போல பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருக்கிறார்.

சுந்தர் பிச்சையைச் சந்திக்கிறார்

முதலமைச்சர் தனது அமெரிக்கா பயணத்தின்போது, முதலீட்டாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச இருக்கிறார். அமெரிக்காவில் 3 அல்லது 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

உடன் செல்வது யார் யார்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Rent a car/bike/boat roam partner.