“எங்கள் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையா… நீங்கள் மட்டும்தான் மக்கள் பிரதிநிதிகளா?” – நாடாளுமன்றத்தை அதிரவிட்ட கனிமொழி!

பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் கடந்த 30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை குறி வைத்து, ‘எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் கடந்த 30 ஆம் தேதி மக்களவையில் பேசுகையில்,, ‘எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று ராகுல் காந்தியை மறைமுகமாக சாடியிருந்தார். அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

மாநில உரிமைகள் பறிப்பு

இந்த நிலையில், மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, அனுராக் தாக்கூரின் சாதிய பேச்சை கடுமையாக சாடியதோடு, “சாதியை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன பெருமை இருக்கிறது. சாதி அற்றவராக வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கை இதுதான்” எனக் கூறினார்.

மேலும், மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி குறைப்பு, தமிழகத்துக்கான கல்வி நிதியை தராததைப் பற்றி பேசிய அவர், “மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.11,600 கோடி வழங்க வேண்டும். ஆனால் ரூ.10,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. மதிய உணவுத் திட்ட நிதியை குறைந்தது ஏன்? ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநில அரசுகள்தான் 50% நிதியை வழங்குகின்றன. மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்து வருகிறது.

ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலத்திடம் இருந்து நிதியைப் பெற்றுகொள்கிறீர்கள். ஆனால், கல்விக்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டியை நிதையை தரமறுக்கிறீர்கள். மணிமேகலையின் கையில் இருந்து அட்சய பாத்திரத்தை பிடுங்கி பிச்சை பாத்திரத்தை வைத்திருக்க கூடிய நிலையில் மாநில அரசுகள் உள்ளது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா?

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்றால் நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லையா? எங்கள் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுக்க வில்லையா? நீங்கள் மட்டும்தான் மக்கள் பிரதிநிதிகளா? எங்கள் நிதியை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதியக் கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

மொழி கொள்கையை வைத்து திமுக அரசியல் செய்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். நான் கேட்கிறேன். உலகில் வேறு எங்காவது மொழி போராட்டத்திற்காக 100க்கும் மேற்பட்டோர் உயிர் தியாகம் செய்ததை உங்களால் காட்ட முடியுமா?. இது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் நாட்டின் விடுதலை போராட்டத்திலேயே பங்கேற்காதவர்கள்தான் நீங்கள். அதனால் தியாகம் என்றால் என்னவென்றே உங்களுக்கு புரியாது.

நீங்கள் சொல்லும் அரசியல் வரலாறு என்ன?. முகலாய மன்னர்களை பற்றி பேசமாட்டீர்கள். மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து உங்கள் அரசியல் வரலாறு பேசாது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்களைப் பற்றி பேச மாட்டீர்கள். பெரியாரை பற்றி நிச்சயமாக நீங்கள் பேசமாட்டீர்கள். ஆனால், ‘அந்தமான் சிறையில் இருந்து புல்புல் பறவையில் ஏறி ஒருதலைவர் வெளியே வந்தார்’ என்று உங்களது Text Book சொல்கிறது. இதுவா scientific Temper?

‘சாதி அற்றவராக வாழ்வதில்தான் பெருமை’

காலம் காலமாக சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என திராவிட இயக்கம் பாடுபட்டு வருகிறது.

இந்த அவையில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரை பார்த்து, உங்கள் சாதி என்னெவென்று உங்களுக்கு தெரியாது என்று பேசுகிறார். இதை பிரதமர் பாராட்டுகிறார். சாதியை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன பெருமை இருக்கிறது. சாதி அற்றவராக வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கை இதுதான்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Dancing with the stars queen night recap for 11/1/2021. 자동차 생활 이야기.