மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு திட்டங்கள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அம்சங்களா?
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த சில அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரமும் மத்திய அரசை கிண்டலடித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் எவையெவை தமிழக அரசின் திட்டங்கள், எவையெவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவை என்பது குறித்த விவரங்கள் இங்கே…
தமிழக அரசின் திட்டங்கள்
“நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்” என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு என்றே, ‘தோழி விடுதி’ என்ற பெயரில் இந்த திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த விடுதி மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அதேபோன்று “1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கனவு திட்டமாக சொல்லும் ‘நான் முதல்வன் திட்டத்தின்’ மறு வடிவம் என திமுக-வினர் கூறுகின்றனர்.
இந்த திட்டம் மூலம் வெளி மாநில, வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான செலவையும் அரசே பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தால் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அம்சங்கள்
அதே போல், இந்த திட்டமானது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல், பயிற்சிப் பணி திட்டம் இடம்பெற்றுள்ளது. புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு 3 மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ‘வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ குறித்த திட்டமும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “தயவு செய்து இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும்” எனக் கிண்டலடித்தார்.