மத்திய பட்ஜெட்: ரூ.10 லட்சம் கல்விக்கடன்… இளைஞர்களுக்கு ரூ. 6,000 உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி… புதிய அறிவிப்புகள் விவரம்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அரசின் இந்த திட்டத்தினால், 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரது பட்ஜெட் உரையில் கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு குறித்து இடம்பெற்ற அறிவிப்புகள் வருமாறு:
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 4.1 கோடி இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பணி அனுபவம் பெறுவதற்கான தொழிற் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 மற்றும் ஒருமுறை உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும்.
புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, அரசு ஆதரவு நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன்களை வழங்க மாதிரி திறன் கடன் திட்டம் திருத்தப்படும்.
இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
பீகாரில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
நாடு முழுவதும் 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIs) மேம்படுத்தப்படும்.
தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.
பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.
தொழிலாளர்களுக்கான தங்கும் இடம் வசதி அரசு – தனியார் பங்களிப்பில் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.