செயலிழந்த மைக்ரோசாஃப்ட்: விமான நிறுவனங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் பாதிப்பு… உங்கள் கணினியில் சிக்கலைத் தீர்க்க வழிகாட்டல்!
இன்று காலை முதல் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம் செயலிழந்ததைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவலாக விமான சேவைகள், வங்கிச் சேவைகள், பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டதால் இணைய உலகமே ஆடிப்போய் உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவை செயலிழப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையால் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு சேவைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தி வந்த பல பங்குச் சந்தைகள், சூப்பர் மார்கெட்டுகள், விமானச் செயல்பாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதன் பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. முக்கிய விமான நிலையங்களில் இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் பாதிப்பு
சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியில் இருந்து சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயணிகளுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து விமான நிறுவனங்கள், கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா,புனே, கோவா செல்லும் விமானங்களும், சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்தியாவின் ஆகாசா, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், தங்களது செயல்பாடுகளில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டன. இண்டிகோ நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 200 க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களே அதிக பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் பேசும் இந்தியா
அதேபோன்று உலக அளவில் பெர்லின், ப்ராக், ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், பார்சிலோனா, லண்டன், எடின்பர்க், பிரஸ்ஸல்ஸ், சிட்னி, ஹாங்காங், லிஸ்பன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களான ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ், அலெஜியன்ட் மற்றும் சன்கன்ட்ரி போன்றவையும் தங்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை. குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சரி செய்வது எப்படி?
கோளாறை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) இந்த சிக்கலை எப்படிச் சரி செய்யலாம் என்பது குறித்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கணினியை Safe Mode or the Windows Recovery Environment ல் ஸ்டார்ட் செய்து, அதில் C:\Windows\System32\drivers\CrowdStrike என்று இருப்பதைக் கண்டறிந்து C-00000291*.sys என்ற இருக்கும் கோப்பை டெலிட் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்தால் கணினி வழக்கம் போல ஸ்டார்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.