‘இந்தியன் 2’ : ஷங்கர் மீதான விமர்சனங்களும் குறைந்துபோன வசூலும்!
இயக்குநர் ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2 ‘ திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே படம் வெளியானதால், முதல் நாளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.
பஞ்சராக்கிய விமர்சனங்கள்
ஆனால், ‘இந்தியன்’ முதல் பாகத்தை மனதில் கொண்டு படம் பார்க்க சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக முதல் நாளில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் அது குறித்த கருத்துகள் இடம்பெற்றன. மேலும், முதல் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல்களுடன் ஒப்பிடுகையில், ‘இந்தியன் 2 ‘ வில் அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அவ்வளவாக நன்றாக இல்லை என்றும், படம் மிகவும் நீளமாக, மெதுவாக நகர்வதாகவும் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின.
மேலும், படத்தில் லஞ்சம் வாங்குவதாகவும், வாங்குகிற சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யாதவர்களாகவும் காட்டப்படும் நபர்கள் பெரும்பாலும் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்களாகவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாகவும் மட்டுமே காட்டப்படுவதாகவும், இயக்குநர் ஷங்கருக்கு அவரது எல்லா படங்களிலும் இது வாடிக்கையாகி விட்டதாகவும், குற்றம் செய்பவர்கள் சேரி அல்லது குப்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும் வகையிலேயே தொடர்ந்து வசனங்கள் இடம்பெறுவதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக ‘இந்தியன்’ முதல் பாகம் தொடங்கி, முதல்வன், சிவாஜி, அந்நியன் என ஷங்கரின் பல படங்களை உதாரணமாக சுட்டிக்காட்டி இருந்தனர்.
சமூக ஊடகங்களில் ‘வச்சு’ செய்யப்பட்ட ஷங்கர்
மேலும், இந்த படங்கள் எல்லாம் வெளியான காலகட்டங்களில் இப்போது இருப்பது போன்று சமூக ஊடகங்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் நிலைமை தற்போது அப்படி இல்லை. எப்படியும் ‘இந்தியன் 2’ விலும் அதே லஞ்சத்தைத் தூக்கிக்கொண்டுதான் ஷங்கர் வருவார். எனவே, இந்த முறை அவரை நன்றாக வெளுத்துவிட வேண்டும் எனக் காத்திருந்த மேற்கூறிய சமூக வலைதள வாசிகள், இந்த முறை ‘இந்தியன் 2’ வையும், இயக்குநரையும் துவைத்து எடுத்துவிட்டார்கள். அதாவது, ‘வச்சு’ செய்து விட்டார்கள்
” லஞ்ச ஊழலுக்கு எதிரான உங்கள் பார்வை, தேசத்தையே அதிரவைத்த தேசிய பங்குச் சந்தை ஊழலில் முக்கியக் குற்றவாளியாக கூறப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா போன்றவர்கள், நாட்டின் உயர் பதவிகளில் லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள் போன்றவர்கள் மீதெல்லாம் படாதா..? தூய்மை பணியாளர்கள், இ-சேவை மைய ஊழியர்கள் போன்றவர்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரியுமா? ” என்ற ரீதியில் காய்ச்சி எடுத்துவிட்டனர்.
குறைந்து போன வசூல்
இவ்வாறு படம் சரியில்லை என்ற விமர்சனங்களும், இயக்குநர் ஷங்கருக்கு எதிரான கருத்துகளும் ரசிகர்களை ‘இந்தியன் 2’ திரையரங்குகளுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு, ஐந்தாவது நாளில் வெறும் 3 கோடி ரூபாய் என்ற அளவுக்கு சிங்கிள் ட்ஜிட்டுக்கு சரிந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 26 கோடிகளும், இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும், கிட்டத்தட்ட ரூபாய் 18.2 கோடியும், மூன்றாவது நாளில் ரூபாய் 15.35 கோடிகளும் வசூல் செய்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் படம் தலா ரூ. 3 கோடிகள் வீதம் 6 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘இந்தியன் 2’ படத்தின் மொத்த ஐந்து நாள் வசூல் ரூ.65.15 கோடியாக உள்ளது. உலகளவில், 117 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலுமே வசூல் மோசமான நிலைமையிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ 48.35 கோடியாகவும், விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 64.8 கோடியாகவும் இருந்தது. அதே போன்று ஷங்கரின் முந்தைய படமான எந்திரன் 2.0, முதல் நாளிலேயே 60. 25 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நீளம் குறைப்பு
இந்த நிலையில், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் உத்தியாக ‘இந்தியன் 2’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக, படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னர் 3 மணி நேரம் இருந்த நீளம், இப்பொழுது 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்டு, புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று லைகா தெரிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முயற்சி பலனளிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.