அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வு… உங்கள் வீட்டுக்கு எவ்வளவு அதிகரிக்கும்? – முழு விவரம்!
தமிழகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளதால், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது. அதே சமயம் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு எவ்வளவு?
0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ஆக இருந்த கட்டணம், 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80-ஆக நிர்ணயம்.
401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.45-ஆக நிர்ணயம்.
501 யூனிட் முதல் 600 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55-ஆக நிர்ணயம்.
601 யூனிட் முதல் 800 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.9.65-ஆக நிர்ணயம்.
801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70-ஆக நிர்ணயம்.
1000 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் ரூ.11.25-ஆக இருந்த மின்சாரக்கட்டணம், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80-ஆக நிர்ணயம்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.35 காசுகளில் இருந்து ரூ.9.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாடு
50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட் ரூ. 9.70 காசுகளில் இருந்து ரூ.10.15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள்
தொழில், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட் ரூ.4.60 காசுகளில் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம், ஒரு கிலோவாட்டுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம், ரூ.7.15 காசுகளில் இருந்து ரூ.7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான மின்சார கட்டணம், ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12.25 காசுகளில் இருந்து ரூ.12.85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இலவச மின்சாரம் தொடரும்
அதே சமயம், அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன்படி. நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால், அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவர்.
தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவில் வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.