‘செங்கோல்’ சர்ச்சை: ‘இது சாணக்கிய நீதி காலம் அல்ல’… அண்ணாமலைக்கு சு. வெங்கடேசன் பதிலடி!

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டபோது, மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து செங்கோலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மக்களவையில் செங்கோல் சர்ச்சை

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் செங்கோலை அகற்ற வேண்டும் எனக் குரல் எழுப்பி இருந்தனர்.

அந்த வகையில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் பேசுகையில், “செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் தெரியுமா? செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்?

செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள்” எனக் கூறி இருந்தார்.

ஆட்சேபித்த அண்ணாமலை

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவது போன்றது எனக் கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரி. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை” எனச் சாடி இருந்தார்.

சு. வெங்கடேசன் விளக்கம்

இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு தனது எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ள சு.வெங்கடேசன், “ திரு. அண்ணாமலை அவர்களே , குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரைகுறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.

‘செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு’ என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு, ‘மன்னராட்சியின் குறியீடு’ என்பதையும் ‘மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர்’ என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள். செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல. நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

அரசியல் சாசனமே உயர்ந்தது

பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும்விடப் பெரியவர் அவைத்தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச்சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

எல்லாவற்றையும்விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக்கொளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள். அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

ஆனால் இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப்பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார். ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.

இது சமூகநீதியின் காலம்

நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன். ‘அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது’.

வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft cans 1,900 employees from xbox gaming divisions. Raven revealed on the masked singer tv grapevine. Simay f trawler – motor yacht charter turkey.