‘நான் முதல்வன்’ திட்டம்: 25,888 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை… மூன்றாண்டுகளில் 5 லட்சம் பணி வாய்ப்புகள்!

ள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை, படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் அவர்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும், அதற்கு வழிகாட்டும் வகையிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட திட்டம் தான் ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம்.

உயர் கல்வியில் படிக்கும் மாணவர்களை, நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் கொண்ட மாணவர்களாக மாற்றுவதற்காக, வருடத்திற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில், ‘நான் முதல்வன் திட்டம்’, கடந்த 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட முதல் கல்வியாண்டிலேயே, எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையான 10 லட்சத்திற்கும் அதிகமாக, 13 லட்சத்து 14,000 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபோடிக்ஸ், மின் வாகனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது

மூன்றாண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்

இதனையடுத்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில், ‘நான் முதல்வன் திட்டம்’ ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2085 கல்லூரிகளில் படிக்கும் 14 லட்சத்து 68 ,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதன் பலனாக, கடந்த 3 மூன்று ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டம் மூலமாக, 3.06 இலட்சம் இளைஞர்களுக்கும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2.02 இலட்சம் இளைஞர்களுக்கும், தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் என மொத்தம் 5.08 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

25,888 மாணவர்களுக்கு வேலை

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ‘நான் முதல்வன் திட்ட’த்தின் மூலம், 2024 ஜூன் 18 நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,888 மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இலாபகரமான வேலைகளைப் பெறுவதற்கு அரசு உதவியுள்ளது. இதுவரை, 252 கல்லூரிகள் வேலை வாய்ப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளன. வேலை வாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாகவும், சுமார் 58,000 மாணவர்கள் இறுதி ஆண்டு படிப்பை படித்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்வு செய்த பன்னாட்டு நிறுவனங்கள்

இந்த ஆண்டு, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், தனது எலெக்ட்ரிக் வாகன (EV) ஆலைகளுக்கு பாலிடெக்னிக் மாணவர்களைச் சேர்க்க உள்ளது. இதற்காக படித்து முடித்து வெளியே வரும் புதிய விண்ணப்பதாரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​120-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், அசெம்பிளி லைன்கள், லாஜிஸ்டிக்ஸ், ஆபரேஷன்ஸ் மற்றும் ஸ்டோர்ஸ் போன்றவற்றில் என்ட்ரி நிலைகளில் ( entry-level)பணியமர்த்தப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக (TNSDC) தகவல் தெரிவிக்கிறது.

மேலும், Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, Delphi TVS, Eicher, Ford, HCL Tech மற்றும் L&T உள்ளிட்ட பல பன்னாட்டு முன்னணி நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. அத்துடன், சில வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் இம்மாணவர்களுக்கு கிடைத்துள்ளன.

சம்பளம் எவ்வளவு?

இந்த மாணவர்களுக்கான சம்பளம் வருடத்திற்கு ரூ. 2 லட்சம் முதல் வருடத்திற்கு 8 லட்சம் வரை வழங்கப்படுவதாகவும், ‘நோக்கியா’ நிறுவனம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வழங்க முன்வந்துள்ளதாகவும் TNSDC தெரிவித்துள்ளது.

இலண்டனில் பயிற்சி

இதனிடையே ‘நான் முதல்வன்’ மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய SCOUT திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வான 25 மாணவ, மாணவியர்கள், ஜூன் 9 முதல் 16 வரை இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய முன்னணி துறைகளில் ஒரு வார காலம் நேரடி பயிற்சி பெற்று அண்மையில் தமிழ்நாடு திரும்பினர்.

‘நான் முதல்வன் திட்ட’த்தின் அடுத்த முன்னெடுப்பு

இந்த நிலையில், ‘நான் முதல்வன் திட்ட’த்தின் அடுத்த முன்னெடுப்பாக, 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி திட்டமும் அறிமுகமாக உள்ளது. அதனடிப்படையில், சென்னை மண்டல மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டித் தேர்வுக்காக 300 பேருக்கும், மதுரை மற்றும் கோவை மையத்தில் வங்கிப் பணி போட்டித் தேர்வுக்காக, தலா 350 பேருக்கும் உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft to shut down skype in may 2025, teams becomes the new savior for communication. 42 meter motor yacht. Meet, marry, murder to premiere on tubi tv grapevine.