இரா.சம்பந்தன் மறைவு: இலங்கை தமிழர் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம்!

லங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அடிப்படையில் வழக்கறிஞரான இரா.சம்பந்தன், நல்ல ஆங்கிலப்புலமை, விவாதம் செய்யும் திறன், ஈழம் குறித்த ஆழமான புரிதல் கொண்டவர்.

அரசியல் வாழ்க்கை

தமிழர் பகுதியாக விளங்கிய திரிகோணமலை தேர்தல் தொகுதியை மையப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இரா.சம்பந்தன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2015 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர்.

இலங்கையில், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த காலகட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

ஈழத்தமிழர்களுக்காக இறுதிவரை குரல்

தமது வாழ்நாள் முழுவதையும் இலங்கை இனப்பிரச்னைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி, தீர்வை வலியுறுத்தி வந்தவர். கடந்த அரை நூற்றாண்டு காலங்களில், இந்தியாவின் பிரதமர்களாக இருந்த அனைவரிடமும் நட்பு பாராட்டியவர். ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட்ட தலைவர்களில் சம்பந்தனுக்கு முக்கிய இடம் உண்டு.

2009 ல் நடந்த இலங்கை இறுதிப் போருக்குப் பிறகு, ஒன்று பட்ட இலங்கை என்ற அமைப்புக்குள்ளாகவாவது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தவர். மனித உரிமை மீறல் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றம், தமிழர் நிலங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த காணி பிரச்னைகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த முக்கிய தலைவராக சம்பந்தன் இருந்தார்.

தலைவர்கள் இரங்கல்

இந்த நிலையில், தனது மரணத்தின் மூலம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் சம்பந்தன். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், , “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளில் இனிமையான தருணங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். அவர் இலங்கையில் வாழும் தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவைக்காக தொடர்ந்து பாடுபட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

“இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன் .

இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார்.

இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கருணாநிதியின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.

ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ராமதாஸ்

“இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியவர் இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஈழத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த இரா.சம்பந்தன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே போர் மூள்வதை தடுக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரது மறைவு ஈழத்தில் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வென்றெடுத்துத் தரும் முயற்சிகளுக்கு பெரும் இழப்பு ஆகும்.”

இரா.முத்தரசன்

“இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்மந்தன் மறைவுக்கு இரங்கல். இரா.சம்மந்தன் இலங்கை தமிழர்களின் சம உரிமைக்காக இடைவிடாது குரல் கொடுத்து வந்தவர்.

இலங்கை தமிழர் உரிமைகளுக்காக போராடிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டவர்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தமிழ் சகோதரர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் தவிர, மேலும் பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Raven revealed on the masked singer tv grapevine. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.