பாராசிட்டமால் உட்பட 52 மருந்துகள் தரமற்றவை.. CDSCO ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்… மருந்துகளை திரும்பப்பெற நடவடிக்கை!
மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட 52 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ-வின் (Central Drugs Standard Control Organization – CDSCO)சமீபத்திய அறிக்கை, மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாராசிட்டமால் மாத்திரை என்பது பரவலாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மற்றும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய மருந்தாகும். இது வலி மற்றும் காய்ச்சலைக் குறைப்பதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சமயங்களில் டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமலேயே கூட காய்ச்சல், உடம்பு வலி போன்ற நேரங்களில் மக்கள் மருந்துக்கடைகளில் வாங்கி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்து வருகிறது.
தரமற்ற பாராசிட்டமால்
இந்த நிலையில் தான் பாராசிட்டமால் மருந்து, ஒழுங்குமுறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்ற கவலை அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வகோடியா (குஜராத்), சோலன் (ஹிமாச்சலப் பிரதேசம்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), ஹரித்வார் (உத்தரகாண்ட்), அம்பாலா, இந்தூர், ஹைதராபாத் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மே மாதத்திற்கான மருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.
இந்த தரமில்லாத 500 மி.கி பாராசிட்டமால் மாத்திரைகள், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள அஸ்கான் ஹெல்த்கேர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த 52 மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால் மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான அசௌகரியங்களுக்கு உட்கொள்ளப்படும் பென்டோபிரசோல் மற்றும் முன்னணி ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அதிக உற்பத்தி
மேலும் வைட்டமின், கால்சியம் சத்துக்கான மாத்திரைகள், மன அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தரமற்ற 52 மருந்துகளில் அதிகபட்சமாக 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மூன்று மருந்துகளில் ஒரு மருந்து இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர்த்து ஜெய்ப்பூர், ஹைதராபாத், குஜராத், ஆந்திரா, மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் ஆகிய இடங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
மருந்துகளை திரும்பப்பெற நடவடிக்கை
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஏற்கனவே சந்தையில் உள்ள இந்த 52 மருந்துகளை திரும்பப்பெறும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.