முடிவுக்கு வந்த இரு காக்கிகளின் மோதல்… காவல்துறை – போக்குவரத்து துறை இடையே சமாதானம்… பின்னணி தகவல்கள்!
அரசுப் பேருந்துகளில் பணி நிமித்தமாக காவலர்கள் செல்லும்போது, ‘வாரண்ட்’ இல்லாத பட்சத்தில், அவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துநர்கள் கேட்கும்போது சில சமயங்களில் இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுவதுண்டு.
மோதலுக்கு காரணம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில், காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் பயணித்தார். அப்போது நடத்துநர் அவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு கூறியபோது, காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என ஆறுமுகப்பாண்டி கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் இதற்கு விளக்கமளித்த அரசு போக்குவரத்து கழகம், காவலர்கள் வாரண்ட் வைத்திருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும், இல்லையென்றால் கட்டாயமாகப் பயணச்சீட்டு வாங்கவேண்டும் என்றும் கூறியது.
அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பரவலாக விதிமீறும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர். சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் சாலையோரம் பேருந்தை நிறுத்தி, அதிலிருந்து பயணியரை இறக்கிவிட்டு, நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு போக்குவரத்துக் காவலர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக தகவல்கள் வெளியாயின. மேலும், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதி மீறிய அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வந்ததால், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இருதரப்புக்குமிடையே பெரிய அளவில் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவியது.
தீர்வு காண பேச்சுவார்த்தை
இது குறித்த விவரம் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா , போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அரசுப் பேருந்தில் காவலர்கள் பயணச்சீட்டு வாங்க உரிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, இந்த மோதலுக்கு காரணமான நாங்குநேரி பேருந்து நடத்துனரும் காவலர் ஆறுமுகப்பாண்டியும் நேரில் சந்தித்து, பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து, கட்டியணைத்து சமாதானம் ஆகி உள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டு, அது சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.