‘கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை கூடாது!’ – தீவிர நடவடிக்கைக்கு முதலமைச்சர் உத்தரவு!

கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் அதே நேரத்தில் தண்ணீர் கிடைப்பதும் குறைவாகவே இருக்கும்.

கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது.

குடிநீர் சிக்கனம் அவசியம்

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலை நிலவுகிறது.

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்குப் பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்தினால் தான் நிலைமையை சமாளிக்க முடியும்.

நீரேற்று நிலையங்கள்

இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை மின்வாரியத்தின் தலைவர் உறுதி செய்திடுவதும் அவசியமாக உள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை

இதனை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கூறிய தகவல்களைப் பகிர்ந்து, அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொண்டார்.


அத்துடன், “குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்”என்றும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dprd kota batam. The real housewives of potomac recap for 8/1/2021. covid showed us that the truth is a matter of life or death.