தமிழ்நாட்டுக்குத் தொடரும் பெருமை… ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் ஏற்றுமதியிலும் முதலிடம்!
ஏற்றுமதி – இறக்குமதி பதிவுகள் குறித்த 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான விவரங்களை NIRYAT ( National Import – Export Record for Yearly Analysis of Trade ) என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இதில் பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் நிறுவனங்கள் வழங்கும் பயன்கள், மகப்பேற்றுக்குபின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக கடந்த வாரம் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் ஏற்றுமதி
இந்த நிலையில், தமிழகத்துக்கு அடுத்த பெருமையாக ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் துறையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து நிர்யாத் ( NIRYAT) வெளியிட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழகத்தின் பங்கு 22.58 சதவீதம் என்றும், அந்த வகையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழகத்தின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் டாலர். அடுத்து 2 ஆம் இடத்தில் குஜராத் (4.378 பில்லியன் டாலர்). 3 ஆம் இடத்தில் மகாராஷ்டிரா (3.784 பில்லியன் டாலர்) ஆகும்.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழகம்மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்த தமிழகம், நாட்டின் முதல் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆவது இடத்தில் கர்நாடகா, 3 ஆவது இடத்தில் உத்தர பிரதேசம் உள்ளன.
தமிழ்நாடு முதலிடம்
கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதிமதிப்பு குறித்து மத்திய அரசின்நிர்யாத் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதில், 43.20 சதவீத தோல் பொருட்களை அதாவது, 2.048 பில்லியன் டாலர் மதிப்புள்ள தோல் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழகம், நாட்டில் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இது குறித்த தகவலை பகிரிந்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஆய்வுஅறிக்கைகளே, தமிழகம் பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் பல்வேறுதுறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமின்றி, எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றியுள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்திலும் கூட தமிழகம் வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது. பிரதமரும், அமைச்சர்களும் பாஜக-வுடன் கள்ள உறவு வைத்துள்ள அதிமுக-வினரும், தமிழகத்தின் வளர்ச்சிகளைப் பற்றி குறை கூறிவருவது உண்மைக்கு மாறானதாகும். அது மட்டுமின்றி, உண்மைகளை மறைத்து பொய்களை கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்களே பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.