வீடுகளில் குறையும் சமையல்… அதிகரிக்கும் ஓட்டல் உணவு பழக்கம்!
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டல்களில் குடும்பமாக சென்று சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்களும், வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் ஆண்களும், இளைஞர்களுமே அதிக அளவில் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களாக இருந்து வந்தனர்.
குடும்பத்தினர் ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது, ஏதாவது ஊர்களுக்கு அல்லது சினிமாவுக்கு செல்லும்போதோ, கோயில்கள், திருவிழாக்களுக்கு செல்லும்போதோ காணப்பட்ட பழக்கமாக இருந்தது. அதேபோன்று அரசு மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், மாதம் ஒருமுறை சம்பள தினத்தன்று தங்களது மனைவி, பிள்ளைகளை ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு வந்து அவரவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொடுத்து சாப்பிட வைப்பார்கள். இவை தவிர, வீட்டில் பெண்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றாலோ அல்லது அவர்கள் ஊர்களுக்குச் சென்றிருந்தாலோ ஓட்டலிலிருந்து பார்சல் வாங்கி வந்து உண்ணும் பழக்கமும் இருந்து வந்தது.
மாறிய உணவு பழக்கம்
ஆனால் ஊர்கள் நகரங்களாகி, நகரங்கள் பெருநகரங்களான பின்னர் தொழில்கள், வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. அதுமட்டுமல்லாது ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் மக்களிடையே ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கத் தொடங்கி, ஓட்டல் உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கமும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இதனால், ஓட்டல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது சாப்பிட ஆரம்பித்தவர்கள், குடும்பத்தில் அல்லது அலுவலகத்தில் அல்லது நட்பு வட்டத்தில் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் அல்லது வேலையில் புரமோஷன் என… ‘பார்ட்டி’ என்ற பெயரில் ஓட்டலுக்குச் செல்வதை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
இதுவே இன்று தினசரி பழக்கமாக மாறிவிட்டது. கணவன்/மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில், வீடுகளில் சமைப்பது என்பது மிகுந்த வேலை சுமையாக பார்க்கப்படுகிறது. இதனால், நினைத்த நேரத்தில் நினைத்த உணவை கையில் இருக்கும் மொபைல் மூலமாகவே ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்-பில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
இவ்வாறு மக்களிடையே அதிகரித்துள்ள இந்த பழக்கம் காரணமாக மக்களிடையே வீடுகளில் சமைத்து உண்ணும் பழக்கம் குறைந்து வருவதாகவும், ஓட்டல்களில் இருந்து உணவை வாங்கி சாப்பிடும் பழக்கமும், பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்து வருவதாகவும் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மற்றும் ICICI Securities இணைந்து நடத்திய ஆய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வீடுகளில் குறையும் சமையல் பழக்கம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
அதிகரித்த உணவு செலவு
கடந்த 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை சாமான்களுக்கான பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை, 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு, 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செ லவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போதாவது ஓட்டல் உணவு என்பது சரி. அதுவே தினசரி பழக்கமாகும்போது, அதனால் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.