இதுதான் பாஜக-வின் ‘வாஷிங் மெஷின்’ மகிமையா? – ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலின் கேள்வி!
ஊழல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜக-வுக்குத் தாவினால், அவர்கள் அக்கட்சியின் வாஷிங் மெஷினில் போடப்பட்டு, அவர்கள் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு, அவர்கள் தூய்மையானவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கு ஆதரமாக பல்வேறு நபர்கள் மீது சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிகழ்வுகளை எதிர்க்கட்சிகள் உதாரணமாக கூறி வருகின்றன.
அண்மையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, ‘பாஜக வாஷிங் மெஷின்’ என்ற எழுதப்பட்டிருந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த வாஷிங் மெஷினில், ‘ஊழல்’, ‘பாலியல் வன்கொடுமை செய்வோர்’, ‘மோசடி பேர்வழி’ போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட கறை படிந்த துணி உள்ளே போடப்பட்டது. சிறிது நேரத்தில் வாஷிங் மெஷினில் இருந்து துணியை எடுத்தபோது ‘பாஜக மோடி வாஷ்’ என்று எழுதப்பட்டிருந்த கறையே இல்லாத துணியாக அது இருந்தது.
இதன்பின் பேசிய பவன் கெரா, “நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜக-வில் இணைந்தால் அடுத்த நொடியே அவர் குற்றமற்றவர் ஆகிவிடுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வைத்தால், வெளியே வரும்போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்” என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.
அம்பலப்படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்
அதேபோன்று, அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த பிரஃபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தது. அக்கட்சியின் முன்னாள் எம்.பி-யான ரிதப்ரதா பானர்ஜி கூறுகையில், “ஏர் இந்தியா ஒப்பந்தத்தின்போது பண முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அதே பிரஃபுல் படேல், பாஜக கூட்டணியி்ல் இணைந்த பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
முன்பு இந்த தலைவர்களை துஷ்பிரயோகம் செய்த பாஜக, கட்சியில் இணைந்ததும் அவர்களை நண்பர்கள் என்று கொண்டாடுகின்றனர். பாஜக-வில் இணையாத தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்றவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள விரிவான கட்டுரை ஒன்றில், எந்தெந்த தலைவர்களெல்லாம் பாஜக-வில் சேர்ந்த பின்னர் நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல், அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது அல்லது கைவிடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் காட்டம்
இப்பிரச்னையை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும் கையிலெடுத்து பிரதமர் மோடியையும், பாஜக-வையும் கடுமையாக சாடி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “பாஜக-வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது Indian Express நாளேடு!
பாஜக-வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பாஜக ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘ED – IT – CBI’தான்!” எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார்.