மத்திய அரசுக்கு எதிராக வழக்கு… மு.க. ஸ்டாலின் அடுத்த அதிரடி… ஒன்று திரளும் தென் மாநிலங்கள்!
அண்மையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் மூலம் கண்டனம் தெரிவிக்க வைத்து, அவரை அலற வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடுத்ததாக மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அடுத்த அதிரடியை அரங்கேற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி, வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தார் எனக் கேள்வி எழுப்பியதோடு, இரண்டு இயற்கைப் பேரிடர் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் – தென் மாவட்டங்களையும் தாக்கியபோது பிரதமர் மோடி ஒரு பைசாவாவது கொடுத்தாரா என்றும் கேட்டார்.
‘வெள்ள நிவாரண நிதி தர மறுத்த மத்திய அரசு‘
தொடர்ந்து பேசிய அவர், “நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினாரா? ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை – தர வேண்டியதை – உதவ வேண்டியதை – உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம். தமிழ்நாட்டின் மொத்த அமைச்சர்களும் இங்கு வந்து தங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். மக்களோடு மக்களாக கூடவே இருந்து, ஆறுதல் கூறி, என்ன தேவைகள் என்று கூடவே இருந்து, வேண்டியதை செய்து கொடுத்தார்கள்.
நானும், டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன். ஒன்றிய அரசிடம் என்ன கேட்டோம்? “மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்… அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும்” என்று, இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு – மறு சீரமைப்பு – நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம்… தந்தார்களா? இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம். பொன்முடி அவர்களை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம்.
இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், பா.ஜ.க. எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது?
ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு, செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம்! வெறுப்பு! வன்மம்! மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது! மேம்பட்ட சிந்தனைகள் உள்ள நாம், நம்முடைய சகோதர –சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்! பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார்.
ஒன்று திரளும் தென் மாநிலங்கள்
ஏற்கெனவே மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம் மோடி அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதேபோன்று, கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து, அம்மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதற்கு முன்னதாக, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி அம்மாநில அமைச்சர்கள் டெல்லியில் கடந்த மாதம் போராட்டம் நடத்தினார்கள். மேலும் கேரளா அமைச்சர்களும் இதேபோன்று போராட்டம் நடத்தி இருந்தார்கள். இந்த போராட்டத்துக்கு திமுக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியை தர மறுப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருப்பது மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக மோடி அரசுக்கு எதிராக தென்மாநிலங்கள் ஒன்று திரண்டு குரல் எழுப்புவது ஆளும் பாஜக-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.