நாடாளுமன்ற தேர்தல் 2024: இந்த ஆண்டுடன் ‘நீட்’ தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு, கடந்த 2 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, இன்று முதல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளன.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு பயிற்சி மையங்களில், மொத்தம் 13,197 பேர் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த மாணவர்கள், அரையாண்டு விடுமுறையில் ஏற்கெனவே நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தனர். ஜனவரி முதல், மாணவர்கள் தங்கள் பிளஸ் 2 தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், நீட் வகுப்புகள் நடத்தப்படவில்லை. இப்போது, தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அவர்கள் மீண்டும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
நீட் பயிற்சி வகுப்புகள்
நீட் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், மே 2 ஆம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. வாரத்தில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளன. கூடவே, முந்தைய ஆண்டுகளின் நீட் வினாத்தாள்களின் அடிப்படையிலும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். சென்னையைப் பொறுத்தமட்டில் மொத்தம் 9 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலும் ‘இந்தியா’ கூட்டணியின் நம்பிக்கையும்
இதனிடையே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ‘தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு’ என்ற வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முன் வைத்துள்ளன. மேலும் பாஜக தவிர்த்து, தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராகவே உள்ளன.
இந்த நிலையில், மத்தியில் இந்த முறை பாஜக நிச்சயம் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் என்றும், ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் திமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேபோன்று இதர மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளும் அதே நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி
எனவே அப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதில் திமுக-வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஏனெனில், அண்மையில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. இதனால், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் குறைந்தபட்சம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்காவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது சாத்தியமான ஒன்றாகவே இருக்கும்.
அப்படி நடந்தால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இல்லாமல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன உளைச்சலிலிருந்து விடுபடும் நிலை ஏற்படும்.