பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்தவர் சின்னப்பிள்ளை. மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால், கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்.
எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும், பெண்களிடம் சிறு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘களஞ்சியம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். அவரது ‘களஞ்சியம்’ அமைப்பினால் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு, மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பில் அவருக்கு ‘ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அந்த விருதை வழங்கினார். அப்போது வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கியது அகில இந்திய செய்தியானது. அவ்வளவு பெயர் பெற்ற அந்த சின்னப்பிள்ளை, சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதாகவும், ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு சென்ட் வீட்டு மனையுடன், பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், சின்னப் பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி, இந்த மாதமே தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.