மு.க. ஸ்டாலின்: தெற்கிலிருந்து ஒரு சரித்திரம்!
ஒரு பெரிய தொழிலதிபரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் அப்பா பார்த்துக் கொண்டிருந்த தொழிலை சிதையாமல் பாதுகாப்பது மட்டுமல்ல, வளர்க்கவும் வேண்டும் என்ற கடமை இருக்கிறது. தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பாதுகாத்தால் போதும் வளர்த்தால் போதும். ஆனால் அரசியல் வாரிசுகளுக்கு அப்படி அல்ல. அப்பா விட்டு விட்டுப் போன லட்சக்கணக்கான மனிதர்களையும் சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க வேண்டும். அந்த விதத்தில் மு.க.ஸ்டாலின் அபாரமான வெற்றி பெற்றிருக்கிறார்.
கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் எனப்படும் தொண்டர்களைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாதுகாத்திருக்கிறார். பொறுப்புக்கு வந்த பிறகு, கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
சகல விதத்திலும் திறமை படைத்த ஒரு ஆளுமைக்கு மகனாகப் பிறப்பது ஒரு வரம்தான். இலக்கியம், திரைப்படம், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து உச்சநட்சத்திரமாகத் திகழ்ந்த கருணாநிதியின் மகனாகப் பிறந்தது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தற்கரிய வரம்தான். ஆனால் அதுவே அவருக்கு சுமையாகவும் இருந்தது. அப்பாவைப் போல வந்து விடுவாரா? முடியாது என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. கடைசியில் கருணாநிதியை விட இவர் மிகவும் பயங்கரமானவர் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களையே சொல்ல வைத்து விட்டார்.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு, நீதிமன்றம் வரையில் போய் தீர்ப்பு வந்த அந்த நேரத்தில், லட்சக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து அழுதபடி நிலைதடுமாறி கையெடுத்துக் கும்பிட்டாரே அந்தக் கணத்தில் கருணாநிதியின் அத்தனை உடன்பிறப்புக்களும் ஒட்டுமொத்தமாக அவரைத் தங்களின் தலைவராக அப்படியே ஏற்றுக் கொண்டனர்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவை அழுத்தம் திருத்தமாக உச்சரித்து மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அந்த நிகழ்ச்சியில் இருந்த அவரது மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உடன்பிறப்புக்கள் அத்தனை பேரும் இதயப் பூர்வமாக அவருடன் இன்னும் நெருக்கமானார்கள்.
பெரியாரின் பிறந்த நாளைச் சமூக நீதி நாளாக அறிவித்ததும் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாள் என்று அறிவித்ததும் திராவிட இயக்கக் கொள்கையில் தான் எந்த அளவுக்கு உறுதியானவர் என்று வெளிப்படுத்தியது.
திராவிடம் என்ற சொல்லே ஏதோ கெட்ட வார்த்தை போல சிலர் பிரசாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில், தனது ஆட்சிக்கு திராவிட மாடல் என்று பெயர் வைத்து அதைத் திரும்பத் திரும்ப சொன்னதில் அவரது உறுதி தெரிந்தது.
திராவிட மாடல் என்றால் அனைவருக்கும் அனைத்தும் என்று சுருக்கமாக இரண்டே வார்த்தையில் விளக்கமும் சொன்னார்.
அந்தப் பெயரிலேயே மகளிர் உரிமைத் தொகை, கல்லூரிப் பெண்களுக்கான புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கான நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்.
கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சியினரையும் தலைவர்களையும் சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் ஒருங்கிணைத்து, மகத்தான வெற்றியைப் பெற்றார். 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவரது தலைமையில் அந்தக் கூட்டணி தொடர்ந்தது. மகத்தான வெற்றி.
உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி.
இப்போது தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் மு.க.ஸ்டாலின்.
அந்தப் பிறந்த நாளில் உத்தரப் பிரதேசம் அகிலேஷ், பீகார் தேஜஸ்வி, டெல்லி கெஜ்ரிவால், கேரளாவின் பினாராயி என அகில இந்திய அளவில் முக்கியமான தலைவர்கள், தமிழ்நாட்டில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக, முஸ்லிம் கட்சி தலைவர்கள் என அத்தனை பேரும் வாழ்த்துச் சொன்னது, வெறும் பிறந்த நாள் கொண்டாட்டமாக அல்ல அடுத்து வரும் தேர்தலுக்கான அரசியல் நிகழ்வு போலவே இருந்தது.
பினராயி விஜயன் தனது வாழ்த்தில் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் மு.கஸ்டாலினின் உறுதி தனக்கு ஊக்கமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் பல இருக்கலாம். ஆனால் பாஜகவுக்கு எதிரான ஒரு கொள்கையை வைத்திருக்கும் கட்சி திமுக. அதனால்தான் பாஜகவை எதிர்த்த ஒரு வலிமையான கூட்டணியை எள்முனையளவும் முரண்பாடு ஏற்படாமல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இப்போது வரையில் மு.க.ஸ்டாலினால் கட்டிக்காப்பாற்ற முடிந்திருக்கிறது.
இந்த மாடலே இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய மாடல் என்று திரும்பத் திரும்பச் சொல்லாமல் சொல்லி வருகிறார் மு.க.ஸ்டாலின்.இந்தியாவின் சரித்திரத்தைத் தெற்கில் இருந்துதான் எழுத வேண்டும் என்று அடிக்கடி சொல்வார் அவர்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கடைப்பிடித்திருக்கும் ஒழுங்கை இந்தியா முழுவதும் கடைப்பிடித்து வெற்றி பெற்றால், அவர் சொன்னது போல, அடுத்த ஆட்சிக்கு தெற்குதான் அடித்தளமாகத்தான் இருக்கும்.