களம் வேறு… காலம் வேறு… கலைஞரின் திமுக ஸ்டாலினின் திமுக ஆனது எப்படி?
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71 ஆவது பிறந்த நாள் இன்று. இதனையொட்டிய சிறப்புக் கட்டுரை இது…
இன்றைக்கு அரசியலுக்கு வர நினைப்பவர்கள் குறுகிய காலத்திற்குள் எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர்… என தங்களது அரசியல் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பொதுவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திமுக-வின் தலைவராகவும் இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு இந்த பதவியும் பொறுப்பும், ஏறக்குறைய 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குப் பிறகே கிடைத்தது.
தகுதி இருந்தும் பதவியைக் கேட்கவில்லை
இத்தனைக்கும், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இருந்த காலகட்டத்திலேயே கட்சித் தலைமை அல்லது ஆட்சித் தலைமை இரண்டில் ஒன்றைத் தன்வசம் கேட்டு ஸ்டாலின் பெற்றிருக்கலாம்; ஆனால் அவர் அதனை செய்யவில்லை. அதுவும், திமுக பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஸ்டாலினை முதலமைச்சராக்கவோ அல்லது கட்சியின் தலைவராக்கவோ ஆக்க, ஆதரவாக குரல் எழுப்பினார்கள். மேலும், மூத்த பத்திரிகையாளர்களிடையே மட்டுமல்ல, பொதுமக்களிடையேயும் ஸ்டாலினின் அரை நூற்றாண்டுக் கால பொதுவாழ்க்கையையும், அவரது உழைப்பையும் கருத்தில்கொண்டு ஸ்டாலினுக்கு இந்த பதவி வழங்குவதில் ஆதரவே காணப்பட்டது.
இத்தனைக்கும் முதலமைச்சர் ஆவதற்கான தகுதியை ஸ்டாலின் அப்போதே நிரூபித்துக்காட்டியிருந்தார். கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக, சென்னை மாநகரத்தின் மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக என்று அவர் ஏற்ற பொறுப்புகளையெல்லாம் சிறப்பாக நிர்வகித்துப் பாராட்டுகளைப் பெற்றவர் அவர். ஆனாலும், தனக்கு முதலமைச்சர் பதவியோ அல்லது கட்சித் தலைவர் பதவியோ வேண்டுமென அவர் கருணாநிதியிடம் வலியுறுத்தவோ அல்லது கோரிக்கை விடுக்கவோ இல்லை. அப்படி செய்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு பதவியைப் பெற்றிருந்திருக்க முடியும். இருப்பினும், அதை அவர் செய்யவில்லை.
காலமே வழங்கிய வாய்ப்பும் பெருமிதமும்
அவரே வழங்கட்டும் என்று வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்குத் தந்தது. கலைஞர் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைவரான அவருக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக-வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அதிமுக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு முதலமைச்சர் ஆகும் வாய்ப்பும் கூட வந்தது. ஆனால், அவர் அதனை செய்யவில்லை. 2021 தேர்தல் வரை காத்திருந்து, தனது கடுமையான உழைப்பு, பிரசாரங்கள் மற்றும் அரசியல் சாதுரியம் மூலம் மக்கள் தீர்ப்பை பெற்று முதலமைச்சர் ஆனார்.
அவர் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்… ” எனச் சொல்லிவிட்டு, தலைநிமிர்ந்து அவர் பார்த்த பார்வையில் அத்தனை பெருமிதம் இருந்தது. அது மிக மிக நியாயமான பெருமிதம். அவரது ஐம்பாதாண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கான பெருமிதம் அது. அந்த தருணத்தில் திமுக தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் வரை அனைவருமே அதே பெருமிதத்தை உணர்ந்தார்கள்.
ஆருடங்களைப் பொய்யாக்கினார்
இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை தாண்டி, அகில இந்திய அளவிலும் கவனம் ஈர்க்கக்கூடிய, ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கவனம் ஈர்த்து, தனது 71 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின். முதலமைச்சர் என்பது ஒருபுறம் இருந்தாலும், திமுக என்கிற கட்சி இன்று அவரது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதிகாரத்தால் அல்ல, அன்பாலேயே அவர் அதைச் சாதித்துக்காட்டியிருக்கிறார். தந்தையின் காலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், தனது சமகாலத்தவர்கள், இளைஞர்கள் என்று மூன்று தலைமுறைகளை இணைக்கும் தலைவராக அவர் இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் தேர்தலில் போட்டியிடும் அதே நேரத்தில், இளைஞர்களுக்கும்கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது.
1970 லிருந்தே ஸ்டாலின் கட்சியில் இருந்தபோதிலும், அவர் எப்போதும் தனது தந்தையின் நிழலில்தான் இருந்தார். கலைஞரின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக எதிர்கொண்டது போல, திமுக பல பிளவுகளைச் சந்திக்கக்கூடும் என்றும் பலர் ஆருடம் கூறினர். ஆனால், அதெல்லாம் தவறு என்று நிரூபித்து, திறமையான தலைவராகவும், நிர்வாகியாகவும், தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவராகவும் இன்று உருவெடுத்து நிற்கிறார் மு.க. ஸ்டாலின்.
2018 ல் திமுக தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் தொண்டர்களின் ஆதரவிற்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார். கட்சி தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பதை உறுதிசெய்து, 2019 நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை அமோகமாக வெற்றி பெற வைத்து, தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ந்து கட்சிக்கு வெற்றிகளையே தேடித் தந்துகொண்டிருக்கிறார். மேலும் தோழமை கட்சிகளையும் பக்குவமாக கையாண்டு, கூட்டணியில் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
களம் வேறு… காலம் வேறு
அதே சமயம், “கருணாநிதியுடன் ஒப்பிட்டால், கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திச் செல்வதில் கருணாநிதியை விட வித்தியாசமான பாணியை கொண்டவர் ஸ்டாலின். கருணாநிதி காலத்து அரசியலும் சூழ்நிலைகளும் வேறு. இப்போதைய அரசியலும் சூழ்நிலைகளும் வேறு என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கருணாநிதி 70 களில் அவசரநிலை ( மிசா) மற்றும் அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஸ்டாலின் இப்போது திமுக-வுடன் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தத்தைக் கொண்ட மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக உடனும், ஒத்துழைக்காத ஒன்றிய அரசுடனும், ஒத்துழைக்காத ஆளுநருடனும் தொடர்ந்து சண்டையிட்டபடியே, கருணாநிதியை விட கடுமையான போராட்டத்தை எதிர்கொள்கிறார்” என்கிறார்கள் தமிழக அரசியல் ஆய்வாளர்கள்.
தொடர் வெற்றி எப்படி சாத்தியம்?
இருப்பினும், கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் சில ஒற்றுமைகளும் உள்ளன. அண்ணா மறைவுக்குப் பின்னர் அவரது காலத்து கட்சித் தலைவர்களை எப்படி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கட்சியை கலைஞர் திறமையுடன் நடத்தினாரோ, அதேபோன்று கருணாநிதியால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட அதே தலைவர்களையும் தனது சுமூகமான அணுகுமுறையாலும் நிர்வாக திறமையாலும் கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து, நடத்திக்கொண்டிருக்கிறார்.
கூடவே பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் என திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்திய முழங்கிய அதே கொள்கை, பாதையிலிருந்து விலகிச் செல்லாமல், திராவிட இயக்க சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் தூக்கி நிறுத்தும் வகையில் நடத்தி வரும் அவரது திராவிட மாடல் ஆட்சி தான், அவரது இந்த தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது எனலாம்!