தொடங்கிய பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு பெற்றோர்கள் எப்படியெல்லாம் உதவலாம்..?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்ததாக 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்பது குறித்து ஆசிரியர்களும், உளவியல் மருத்துவர்களும் சொல்லும் ஆலோசனைகள் இங்கே…
முதலில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களைவிடப் பெற்றோர் பதற்றமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்களுடைய கவலையைப் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது.
மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக கருதி, அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
தேர்வெழுதப்போகும் மாணவர்களிடம் எதிர்மறையாக பேசாமல், ‘ உன்னால் முடியும்… நிச்சயம் அதிக மதிப்பெண்கள் பெறுவாய்…’ என்பது போன்ற தன்னம்பிக்கையான வார்த்தைகளைப் பெற்றோர் பேச வேண்டும்.
தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து குறிப்புகளையும், பேனா, பென்சில் போன்ற அனைத்து பொருட்களையும் உங்கள் பிள்ளை சேகரித்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தேர்வுக்குப் படிப்பதற்கான அட்டவணையை உங்களது பிள்ளை, தனக்கு ஏற்ற வகையில் உருவாக்க உதவுங்கள்.
தேர்வு நேரத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தர வேண்டும். வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுப் பொருள்களால் சில நேரங்களில் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுத் தேர்வு எழுதுவதில் தடை ஏற்படலாம். ஆகவே, கூடுமானவரை வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
புது உணவுகளைச் சமைத்துத் தருவதை அறவே பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
ஆழ்ந்த தூக்கமும், இடையிடையே சிறு சிறு ஓய்வும் மாணவர்களுக்கு அவசியம் என்பதைப் பெற்றோர் உணருவது அவசியம்.
பிள்ளைகள் நள்ளிரவு வரை கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து, இரவு நன்றாகத் தூங்கி, காலையில் எழுந்து படிப்பதை வலியுறுத்துங்கள். காலையில் படிக்கும்போது கடினமான விஷயங்கள்கூட எளிதாகப் புரியும்.
தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்கள் சில விஷயங்களை மனப்பாடம் செய்து, எழுதிப் பார்ப்பது நல்லது. சிலவற்றை க்விஸ் மாதிரி வைத்துக்கொள்ளலாம். இதற்கெல்லாம் பெற்றோர்கள் உதவலாம்.
தேர்வுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்போடு நடக்க வேண்டாம். அவர்களைச் சந்தோஷமான மனநிலையில் வைத்திருங்கள். அவர்களுக்குப் பிடித்த இசையைக் கொஞ்சநேரம் கேட்கவும், பிடித்த விளையாட்டைக் கொஞ்சநேரம் விளையாடவும் அனுமதியுங்கள்.
உங்கள் பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்துகள்!