திறப்புக்குத் தயாரான கலைஞர் நினைவிடம்… ஸ்டாலின் அழைப்பு… அதிமுக, பாஜக கலந்துகொள்ளுமா?
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ல் மறைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மெரினாவில் கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து, கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் பொதுப் பணித் துறையால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில், 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று முகப்பில், கலைஞர் நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைகிறது.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பிப்ரவரி 26 ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறந்து வைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டசபையில் இன்று அறிவித்தார்.
அழைப்பு விடுத்த முதலமைச்சர்
கேள்வி பதில் நேரத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவன் கலைஞர். கலைஞரின் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய, நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும், வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம்.
ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி, தோழமை கட்சி உள்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக பங்கேற்குமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், திமுக உள்ளிட்ட பிற கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்-பி.-க்கள், கட்சி நிர்வாகிகளுடன் பொது இடங்களில் அதிமுக-வினர் நட்புடன் நடந்துகொண்டு, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். கலைஞர் மறைந்தபோது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட அதிமுக அமைச்சர்கள், தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
அந்த வகையில், கலைஞர் நினைவிட திறப்பு நிகழ்ச்சியிலும் அதிமுக-வினர் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அக்கட்சியினர் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோன்று பாஜக-வினரும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.