‘சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி திட்டம், கல்வி உதவித் தொகை’ – முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக பேசிய மு.க. ஸ்டாலின், “சந்தித்து கோரிக்கை வைத்தால் தான் நிறைவேற்றப்படும் என்பதாக இல்லாமல், நீங்கள் என்ன வேண்டும் என்று சிந்தித்தால் அதனை செயல்படுத்தித் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்துள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கோரிக்கை. மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ், காலம் குறிப்பிடப்படாமல், நிரந்தர சான்றிதழாக வழங்க அரசாணை 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையினை பரிசீலிக்கப்பட்டு, தகுதிகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று நீண்டநாள் சிறையிலிருந்த 10 சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரியத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 27 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஆவன செய்யப்படும் என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் 15.2.2024 அன்று அறிவித்துள்ளேன். அதுவும் விரைவில் கிடைக்கும்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும்.
வக்ஃப் நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, அரசு விரைவில் அனுமதி வழங்கும்.
ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கான கல்வி உதவித்தொகையினை, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 26,256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் அராபிக் பாடத்திட்டம் குறைவான மாணவர் சேர்க்கையால் இந்த ஆண்டு கைவிடப்பட்டிருந்தது. அடுத்த கல்வியாண்டு முதல், இப்பாடத்திட்டம் மீண்டும் தொலைதூரக் கல்வி மூலம் கொண்டு வரப்படும்.
முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்த இரண்டாம் மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு, கணவர் இறப்புக்கு பின்னால் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.