தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை … திருமண விழாக்களில் பரிமாறினாலும் தண்டனை!
குழந்தைகள் விரும்பு உண்ணக்கூடிய பஞ்சு மிட்டாயைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் கலர் பொடியில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ரசாயன கலப்பு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையிலும் கடந்த 8 ஆம் தேதியன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1, 000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டன.
பஞ்சு மிட்டாய் மட்டுமல்லாது, நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளையும் அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், ‘ரொடமைன் பி’ (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘ ரொடமைன் பி’ எனப்படும் எனப்படும் இந்த செயற்கை நிறமூட்டி, பெல்ட், காலணி, ஆடை, ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கான விஷ நிறமிதான், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமி என்றும், இத்தகைய நிறமியைக் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாயைச் சாப்பிட்டால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
திருமண விழாக்கள், பொது நிகழ்வுகளில் பரிமாறவும் தடை
எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவற்றுக்குத் தடை விதித்தும், தண்டனைக்குரிய குற்றமாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.