‘தமிழ்நாடு அரசின் உரையை ஏற்க முடியாது’ என ஆளுநர் கூறியதற்கு என்ன காரணம்?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வழக்கமாக, ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கம். அரசின் உரையை ஆளுநர் வாசிப்பார். அரசு, கடந்த காலத்தில் மேற்கொண்ட திட்டங்கள் போன்றவை அந்த உரையில் இடம் பெறும். அந்த வகையில், இந்தக் கூட்டத் தொடரில் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும்.
ஆனால், ஆளுநர் அந்த உரையில் முதலில் சில வரிகளை மட்டும் வாசித்து விட்டு, ‘இந்த உரையை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் தன்னால் ஏற்க முடியாது’ என்று கூறி விட்டு அமர்ந்து விட்டார். தேசிய கீதத்தை முதலில் பாடி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அவர் உரையை படிக்காததால், சபாநாயகர் அப்பாவு அந்த உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக அவையில் படித்தார். அதே சமயம், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநர், தான் படிக்க வேண்டிய உரையை தன்னால் ஏற்க முடியாது என்று சொன்னாரே ஒழிய, எந்தெந்தப் பகுதிகளை அவரால் ஏற்க முடியாது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இந்த நிலையில் அரசியல் பார்வையாளர்கள், அந்த உரையில் உள்ள பின்வரும் பகுதிகள்தான் ஆளுநருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அவை வருமாறு…
*நிதி ஆயோக்கின் 2022 ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
*ஒன்றிய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு முறையை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.
*சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்பை வழங்கவில்லை.
*தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, மதநல்லிணக்கம் ஆகியவை பராமரிக்கப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக
நிறுவனங்களால் தமிழ்நாடு அமைதியான மாநிலமாகக் கருதப்படுகிறது.
*அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி முறையைப்
பின்பற்றுவதில், இந்த அரசு உறுதியாக உள்ளது.
*பெண்களின் முழுமையான ஆற்றலையும் திறமைகளையும் செம்மையாகப் பயன்படுத்தும்போது மட்டுமே, சமூகத்தில் உண்மையான முன்னேற்றம்
சாத்தியமாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.
*தந்தை பெரியாரின் இலட்சியங்களைப் பின்பற்றி, அனைத்து குடிமக்களின் கண்ணியத்தையும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் கண்ணியத்தைக் காத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
*சமூகநீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றிற்கு நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்.
*ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.
*மிக்ஜாம் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு தரும் என நம்புகிறோம்.
இவ்வாறு, ‘ஒன்றிய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கை, தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடி’ போன்ற வரிகள், ஆளுநர் ரவிக்கு உடன்பாடாக இல்லை என்பதால் அவர் உரையைப் படிக்க மறுத்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.