வேலைவாய்ப்புகளை அதிகரிக்க MSME துறையில் அதிரடி மாற்றங்கள்… தமிழ்நாடு அரசு தீவிரம்!
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை முக்கிய பங்காற்றுகின்றன. இவை பெரு நிறுவனங்களைவிட, குறைந்த முதலீட்டில் வாழ்வாதார மூலங்களை வழங்கி, ஒட்டுமொத்த சமூக – பொருளாதார மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன.
மேலும், ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளின் தொழில்மயமாக்கலை எளிதாக்குகின்றன. ஆகையால், இவை மண்டல ஏற்றத்தாழ்வுகளையும் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு குடிபெயர்தலை குறைத்தலில் உதவி, மாநிலத்தின் வருமானம் மற்றும் செல்வ வளம் ஆகியவற்றில் நடுநிலையான பகிர்வினையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் MSME துறையின் தொழில் கொள்கைகளை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், இந்த துறையில் எத்தகைய முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனைகளையும் செயல்திட்டங்களையும் வழங்குவதற்காக அவுட்சோர்சிங் மூலம் ஆலோசனை நிறுவனம் ஒன்றை பணி அமர்த்தி உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள், சில்லறை வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட துறைகள் மாற்றத்துக்கானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து, அதற்கான முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், தொழில்துறை வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக, MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (MTIPB),தொழில்துறை மாற்றங்களுக்கான அமைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.
“இந்த முன்முயற்சியானது, தொழிற்துறையை செயல்பாட்டு சிறப்பம்சம், திறன் மேம்பாடு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, சந்தை அணுகல் மற்றும் நிலையானதை ஏற்றுக்கொள்வதை செயல்படுத்துவது என ஐந்து அளவுகோல்களின் கீழ் பட்டியலிடக்கூடிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறையின் போக்குகள் மாறிவரும் நிலையில், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் எதிர்கால செயல்பாடுகளை இந்த செயல் திட்டம் வரையறுக்கும்” என MSME துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொழில் மற்றும் வணிகங்களின் அளவு மற்றும் அவற்றின் தன்மையை, வேலைவாய்ப்பை உருவாக்குவதைத் தவிர, மாநிலத்தில் அவற்றின் புவியியல் பரவல் மற்றும் தற்போதைய வேலைகள் ஆகியவற்றை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள்.
மேலும், கொடுக்கப்பட்ட துறையில் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அதிகபட்ச அளவிலான வழிமுறை மற்றும் தன்மையை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். மேலும் அவர்கள் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு திறன் மற்றும் சேவை வழங்குநர்கள் துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டின் நிலை குறித்து நிறுவனங்களுடன் விவாதிக்கவும் செய்வார்கள்.
ஒவ்வொரு பரிமாணத்திலும் MSME துறை எதிர்கொள்ளும் சவால்கள், ‘தொழில் மாற்ற செயல்திட்டத்தை’ உருவாக்குவதற்கு பகுப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்த செயல் திட்டம் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.