தாமதமாகும் சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்… தட்டிக்கழிக்கிறதா ஒன்றிய அரசு?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய அரசு காலதாமதம் செய்து வருவதோடு, அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒன்றிய அரசின் பங்கு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) இந்த திட்டப்பணிகள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 17-08-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு எதிர்பார்த்திருந்தது.

மேலும், பிரதமர் மோடியுடன் நடந்த பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆனாலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவுக்காக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்தும், இதுவரை அது குறித்து எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், இவற்றையெல்லாம் குறிப்பிட்டு மிக கவலையுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் தலையிட்டு, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Direct hire fdh. Agência nacional de transportes aquaviários (antaq) : um guia completo e intuitivo. Das team ross & kühne.