நிதி ஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு… தலைநகரை அதிரவைத்த திமுக-வின் போராட்டம்!

மிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் வரிப் பகிர்வில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையிலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த பேரிடரின் பாதிப்புகளைச் சரி செய்ய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இது குறித்து திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் பல முறை வலியுறுத்தியும் மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்படுகிறது?

இந்த நிலையில், வரிப் பகிர்விலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன், இது விஷயத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றன என்பது குறித்த புள்ளி விவரங்களைத் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை என்று தெளிவாகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களை விட தென்மாநிலங்கள் குறைவாகவே பெறுகின்றன. அதாவது, ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், மற்ற மாநிலங்களை விட குறைவான வருமானத்தையே தென்மாநிலங்கள் பெறுகின்றன..

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

1) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டி நீங்கலாக) – ரூ.22,26,983.39 கோடி.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை ரூ.3,41,817.60 கோடி.

2) கடந்த 5 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் (ஒட்டுமொத்தமாக) – ரூ.6,42,295.05 கோடி

ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை – ரூ.6,91,375.12 கோடி

நான் எழுப்பிய பின்வரும் பாராளுமன்ற கேள்விகளுக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதில்களைக் காணுங்கள்!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் வழங்கிய ஒவ்வொரு ரூபாயின் அடிப்படையில் ஒன்றிய அரசு திருப்பித் அளித்த தொகை பின்வருமாறு:

தமிழ்நாடு – 26 பைசா
கர்நாடகா – 16 பைசா
தெலுங்கானா – 40 பைசா
கேரளா – 62 பைசா
மத்தியப் பிரதேசம் – 1 ரூபாய் 70 பைசா
உத்திரப் பிரதேசம் – 2 ரூபாய் 2 பைசா
ராஜஸ்தான் – 1 ரூபாய் 14 பைசா

திமுக நடத்திய ‘அல்வா’ போராட்டம்

இவ்வாறு அவர் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ள நிலையில், ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச போக்கை மக்களுக்கு உணர்த்தும் விதமாக திமுக சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், நெல்லையிலும் பொதுமக்களுக்கு இன்று அல்வா கொடுக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்களிடம் அல்வாவை வழங்கிய திமுக-வினர், தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பங்கீட்டை ஒன்றிய அரசு தர மறுப்பதை விளக்கிக் கூறினர்.

இந்த நிலையில், உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறி, ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், X சமூக வலைதளத்தில் #BJPLootingOurTax என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

கேரளா போராட்டத்தில் பங்கேற்ற பிடிஆர்

இது ஒருபுறம் இருக்க, மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய பாஜக அரசு தலையிடுவதை எதிர்த்து, டெல்லியில் கேரளா அமைச்சரவை சார்பில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்று பேசினர்.

வரிந்து கட்டிய கர்நாடகா

முன்னதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த போக்கை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச போக்குக்கு எதிராக இப்படி தென்மாநிலங்கள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தும் வகையில், தென் மாநிலங்களின் பொருளாதாரக் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளது ஒன்றிய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Characters of domestic helper | 健樂護理有限公司 kl home care ltd. Agência espacial brasileira (aeb) : aprenda tudo sobre. / kempener straße.