‘ஸ்பெயின் பயண அனுபவங்கள்… ‘ – முதலமைச்சர் நெகிழ்ச்சி கடிதம்!

யணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. நம்மிடம் இருக்கும் பெருமைமிகு வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று அண்மையில் தான் மேற்கொண்ட ஸ்பெயின் பயணம் குறித்து உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயணத்தில் தான் கண்ட, உணர்ந்த பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதனை நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.

முதலீடுகளைத் திரட்டுவதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த நாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன.

இந்த நிலையில், தனது ஸ்பெயின் பயண அனுபவங்கள் குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்கள் தொகையைவிட ஸ்பெயின் என்கிற நாட்டின் மக்கள்தொகை குறைவுதான்.

ஸ்பெயினுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது ஏன்?

ஸ்பெயின் நாட்டின் தட்பவெப்பம் என்பது நம் நாட்டை, அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குளிராகத்தான் தெரியும். ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்பெயின் நாட்டின் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்குச் செல்வதில்லை என்பதால் மற்ற நாடுகளிலிருந்து இங்கு வருகிறார்கள். அத்துடன், ஸ்பெயின் நாட்டின் கலைப்படைப்புகள் உலகின் பல நாடுகளையும் ஈர்க்கக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள்.

டொலிடோ

‘மூன்று பண்பாடுகளின் நகரம்’ என்ற சிறப்புப் பெயர் டொலிடோவுக்கு உண்டு. முதலில் யூதர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், அதன்பின் முஸ்லிம்கள் என மூன்று மதங்களைச் சார்ந்த மன்னர்களின் படையெடுப்பு நிகழ்ந்திருந்தாலும், மூன்று மதத்தின் மக்களும் அவரவர் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்த – வாழ்ந்து வருகிற பெருமை டொலிடோ நகரத்திற்கு உண்டு.

‘மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைக்கும் அரசியல் இல்லை’

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் ரோமானிய அரசாட்சியின் அரண்மனையாக இருந்த இந்தக் கோட்டை, 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரால் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது. பழமை மாறாத கோட்டையும் அதன் மதில்களும் டொலிடோ நகரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. தொன்மை மாறாத கட்டடக்கலைகளைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்குக் கலைச்செல்வமாக ஒப்படைக்கும் தொலைநோக்குப் பார்வையை அந்நாட்டில் காண முடிந்தது.

வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த்திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் லாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது.

‘நமது பெருமைமிகு வரலாற்றை உணர வேண்டும்’

நாங்கள் அங்கே சென்றிருந்தபோது இளைய தலைமுறையினர் பலரும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றைத் திரிக்கும். பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள்.

‘பயணம் என்பது உலகத்தைக் காணும் ஜன்னல்’

பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல். நாம் அறியாத பல செய்திகளை நமக்கு நேரடியாகக் கற்றுத் தருவதற்குப் பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. அதனை இந்தப் பத்து நாள் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். பயணத்தில் இருந்தாலும் எனக்குள்ள பொறுப்புகளையும் அதற்குரிய பணிகளையும் மறந்துவிடவில்லை.

ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Characters of domestic helper | 健樂護理有限公司 kl home care ltd. A anm mantém um banco de dados com informações sobre os recursos minerais do brasil. Das team ross & kühne.