ரயிலில் திருடு போன 70,000 ரூபாய் செல்போனும் கூகுள் மேப் உதவியால் பிடிபட்ட திருடனும்!
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜ் பகத் என்பவரின் தந்தை, அவரது நண்பரின் பணி ஓய்வு விழாவில் கலந்துகொள்வதற்காக இரவில் நாகர்கோவிலிலிருந்து திருச்சி நோக்கிச் செல்கிறார். கூட்டமே இல்லாத அந்த பெட்டியில் அசந்து தூங்கிய அவர், மணியாச்சி வரும்போது திடீரென விழித்துப் பார்க்கும்போது, தனது பையைக் காணாமல் திடுக்கிடுகிறார்.
அந்த பையில் அவரது மகன் அவருக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த 70,000 ரூபாய் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட பொருளும், பணமும் இருந்த நிலையில், அவை அனைத்தும் பறிபோனதால் என்ன செய்வதென்று திகைத்தவர், கூகுள் மேப் உதவியுடன் திருடனைக் கண்டுபிடித்து, பொருட்களை மீட்டது எப்படி என்பது குறித்து சமூக வலைதளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
படிக்க சுவாரஸ்யமான அந்த பதிவு இங்கே…
“ இன்று காலையிலே பரபரப்பு…
இன்று ( 04 02 2024 ) காலை 10 மணியளவில் திருச்சி நண்பரின் பணி ஓய்வு விழா.
எனவே நாகர்கோவிலிலிருந்து நடுஇரவு 12 30 மணிக்கு புறப்படும் ஹைதரபாத் எக்ஸ்பிரசில் செல்ல முடிவு செய்தேன். இரவு 11 30 மணிக்கு நாகர்கோவில் கோட்டர் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தேன். எதிர்பாராதவிதமாக தோழர் ராஜுவும் அதே நிகழ்ச்சிக்கு செல்வதற்கு காத்திருந்தார்.
ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம். இறுதியாக நடு இரவு 1.48 க்கு கிளம்பியது. எங்களது பெட்டியில் என்னையும் ராஜுவையும் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே பயணம் செய்தனர். இரவு 2 45 க்கு நெல்லை வந்து சேர்ந்தது. நல்ல தூக்கம்.
அடுத்து மணியாச்சிக்கு வரும்பொழுது தற்செயலாக விழித்தேன். மணி அதிகாலை 3 45. திடுக்கிட்டேன். . என்னுடைய பையை காணவில்லை. கடந்த CITU மாநாட்டில் அரிவாள் சுத்தியல் சின்னத்துடன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பை. அந்தப்பையில் பேண்ட், சர்ட், உள்ளாடைகள், மொபைல் போன்,சார்ஜர், ப்ளூ டூத் ஆயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாம் இருந்தது.
அந்த மொபைலின் மதிப்பு ரூபாய் 70 000 . வெளி நாட்டில் வசிக்கும் எனது அன்பு மகன் ஒரு மாதத்திற்கு முன்னர் ஆசையாக வாங்கி கொடுத்த அன்பளிப்பு
குழம்பி போய், ராஜிவையை எழுப்பி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தேன். கோவில்பட்டியை நோக்கி ரயில் விரைந்து கொண்டிருந்து. .. தோழர் ராஜுவின் தொலைபேசி மூலமாக நாகர்கோவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த எனது இளைய மகன் ராஜ் பகத்திடம் பை , மொபைல் திருடு போன விசயத்தை கூறினேன்.
எங்களது குடும்பத்தில் உள்ள 6 பேரின் தொலைபேசி எண்களும் GOOGLE MAP ல் இணைக்கப்பட்டிருக்கும் . ஒருவரின் இருப்பிடம் அல்லது பயணம், மொபைலின் தொலைபேசி யின் இருப்பிடம் எல்லாம் ஆறு பேருக்குமே தெரியும் . திருடிக் கொண்டு போன எனது போன் எங்கே இருக்கின்றது என்று எனது மகனிடம் LOCATION MAP யை பார்த்து சொல்லுமாறு கேட்டேன்.
திருடன் எனது மொபைல் போனுடன் நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தில் இருப்பதாக BSNL டவர் சொல்கின்றது என்று தெரிவித்தான். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் மொபைல் போன் நாகர்கோவிலை நோக்கி திரும்ப வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தான். ஆக திருடன் நெல்லையில் திருடிவிட்டு , திருட்டுப் பொருளுடன் நாகர்கோவில் செல்லும் கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் மூலமாக நாகர்கோவில் வந்து கொண்டிருப்பதாக தெரிந்தது.
காலை 5 மணிக்கு கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வந்து சேர்ந்தது. எனது மகnuம் அவனுடைய நண்பனும் கோட்டார் ரயில்வே ஸ்டேசனுக்கு விரைந்து வந்தனர். திருடனைப் பிடிக்க CITUஅடையாளத்துடன் வரும் திருடனுக்காக காத்திருந்தனர். முதலில் ரயில்வே போலிசிடம் சென்று புகார் செய்தனர். திருடனைப் பிடிக்க உதவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ‘தினம் தினம் இது போன்று பிரச்னைகள் வருவதாகவும் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்ல , 70 000 ரூபாயை மறந்து விடுங்கள்…’ என்று கைவிரித்து விட்டனர். ( இதே நேரத்தில் தோழர் ராஜிவை திருச்சிக்கு அனுப்பி விட்டு, கோவில்பட்டிக்கு வந்து சேர்ந்த நான், திருச்சி பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பவும் மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டேன் ) .
எனவே, தாங்களாக திருடனை பிடித்து விடலாம் என்று முடிவு செய்த எனது மகனும் அவன் நன்பனும் ரயில்வே ஸ்டேசனின் இரு வாசலில் காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கினர். அந்தக் கூட்டத்தில் திருடனைப் பிடிக்க முடியவில்லை.
மறுபடியும் போன் இருப்பிடத்தைப் பார்த்தால் குமரி ரோட்டில் நாகர்கோவில் டவுண் பஸ் ஸ்டாண்டை நோக்கி மொபைல் போன், அதாவது திருடன் செல்வதாக BSNL டவர் மூலமாக GOOGLE MAP காட்டுகின்றது. பஸ் ஸ்டாண்டு வந்தால் அங்கேயும் நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டம். எப்படி பையை அடையாளம் காண்பது ? திருடனை பிடிப்பது ? போலிசே முடியாது என்று சொன்ன விசயமாச்சே ?
மறுபடியும் இருப்பிடத்தை பார்த்தால் இரண்டு மீட்டர் பக்கத்தில் இருப்பதாக BSNL டவர் சொல்கின்றது. அப்புறம் என்ன ? நெருங்கி விட்டோம். அவர்கள் பக்கத்தில் திருடனுக்குரிய அனைத்து லட்சணங்களும் உடைய ஒரு வாலிபனிடம் CITU அடையாளப்பை இருக்கின்றது.
அப்புறம் அந்த வாலிபனை எனது மகனும் அவன் நண்பனும் போலீஸ் “மாடலில் ” விசாரித்தார்கள். அப்புறம் பார்த்தால் சினிமாவில் அடிவாங்கிய வடிவேல், அனைத்து திருட்டு பொருட்களையும் திரும்ப கொட்டுவது போல், அந்த திருடன் தன் உடுப்பில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.
காலை 5 .30 மணியளவில் 70, 000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், சார்ஜர், ப்ளூ டூத் , ஆயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாம் திரும்ப கிடைத்தது. ரயில்வே போலீஸ் இயலாது என்று கைவிரித்த விசயத்தை, எனது மகனும் நண்பனும் செய்து முடித்தார்கள்.
காலை 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்த எனக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. பணியில் இருந்த போது இது போன்று பல விசயங்கள் செய்து கொடுத்த எனக்கே BSNL டவர் உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
BSNL டவர் செயல்பட்ட விதம், அதோடு இணைந்து GOOGLE MAP LOCATION APP செயல்பாடு எல்லாவவற்றிற்கும் மேலாக அறிவியலை மிகச் சரியான முறையில் பயன்படுத்திய எனது மகன் மற்றும் அவனது நண்பன் செயல்பாடுகள் எல்லாம் உதவிபுரிந்தன. கடந்த காலங்களில், திருடு போய் பொருட்களைப் பறி கொடுத்த எனது மூத்தோர்கள், ஜோஸ்யக்காரனையும் குறி சொல்பவனையும் தேடி அலைந்ததும் ஞாபகத்து வருகின்றன.
மிகச் சின்ன விசயம் தான் !
எல்லாத் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் அடையாளம் காணமுடியும் ! பிடிக்க முடியும் ! அதற்கான உறுதி நம்மிடம் இருந்தால்……
இதைத்தான் சொல்ல வந்தேன்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இவரது இளைய மகன் ராஜ் பகத்தும் ( Raj Bhagat P #Mapper4Life), தனது தந்தைக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை X தளத்தில் பகிர்ந்துள்ளார்.