3 நாள் கணித்தமிழ் மாநாடு… AI தொழில்நுட்பத்தை தமிழில் உருவாக்க முயற்சி!

மிழ்நாடு அரசின் சார்பில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணையம் தொடர்பான மாநாடு ‘கணித்தமிழ் மாநாடு’ என்ற பெயரில், வருகிற 8, 9, 10 ஆகிய 3 தினங்களில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன, சமர்ப்பிக்கப்பட இருக்கிற ஆய்வுக் கட்டுரைகள் என்னென்ன, என்னென்ன தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே…

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, 1999 ஆம் ஆண்டு ‘தமிழ்இணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் விளைவாகத்தான் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவானது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அந்த மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ‘தமிழ்99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டு, அதற்கான அரசு அங்கீகாரத்துடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.

3 நாள் கணித்தமிழ் மாநாடு

இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டை, இம்மாதம் 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில், இளம் தலைமுறையினருக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் புத்தொளி பெற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது.

தமிழில் AI தொழில்நுட்பம்…

ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.

இம்மாநாட்டில் தமிழறிஞர்கள், மொழித்தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த ஆளுமைகள் வெவ்வேறு தலைப்புகளில் விரிவுரை வழங்குவார்கள். ஆளுமைகளுக்கு இடையேயான குழு விவாதங்களும் நடத்தப்படும்.

ஆய்வுக் கட்டுரைகள்

மேலும், தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்குவோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, புத்தகமாக தொகுக்கப்படும். இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளை புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும். மொழி தொழில்நுட்பங்கள் தொடர்பான அதிநவீன தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாகக் கண்காட்சி அமையும்.

இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை, முன்னோடியாக தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை www.kanitamil.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. A agência nacional de Águas e saneamento básico (ana) : um guia completo. Ross & kühne gmbh.