குற்றவாளிகளுக்கு ‘ஆப்பு’ வைக்கும் 3 புதிய ஆப்-கள்… சென்னை காவல்துறையின் செம ‘செக்மேட்’!
சென்னை போன்ற பெருநகரங்களைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை ஒருபுறம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தினமும் சென்னைக்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கை மறுபுறம். இத்தகையவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் காவல்துறையின் பொறுப்பும் கடமையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. கூடவே, இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, காவல்துறை தனது செயல்பாடுகளை நவீனப்படுத்திக் கொள்வதும் அவசியமாக உள்ளது.
அந்த வகையில்தான், சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாகவும் ‘பருந்து, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு மற்றும் நிவாரணம்’ என 3 புதிய செயலிகளையும், இந்தியாவிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக ‘பந்தம்’ என்ற திட்டத்தையும் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
3 செயலிகளின் செயல்பாடுகள் என்ன?
பருந்து செயலி
சென்னை மாநகர காவல் எல்லையில் 104 காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சாதாரண குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் வசதி, 24 மணி நேரமும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தளமாக ‘பருந்து செயலி’ உள்ளது. இந்த செயலி ரூ.25 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்படும் போதும், ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போதும், ஜாமீன் வழங்கப்படும்போதும், சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை இந்த செயலி அனுப்பும். இதனால் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகளைப் விரைவாக கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் குற்றவாளிகளின் தொடர்புடைய வழக்குகளை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு செயலி (IVMS – Integrated Vehicle Monitoring System)
சென்னை மற்றும் இதர இடங்களில் காணாமல் போன மற்றும் திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்கவும், திருட்டு வாகனங்களை செயின், செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளையில் குற்றவாளிகள் பயன்படுத்துவதை தடுக்கவும் ரூ.1.81 கோடி செலவில், இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருடு போன வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இதர வாகனங்களின் விவரங்கள் IVMS ல் பதிவேற்றம் செய்யப்பட்டு சென்னையில் 25 இடங்களில், IVMS உள்ளடக்கிய 75 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், மேற்படி கேமராக்களில் பதிவாகும் வாகனங்கள் மற்றும் சந்தேக வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அந்த வாகனங்களின் உண்மையான விவரங்கள் காண்பிக்கப்படும் போது, அவை திருடு போன வாகனமா அல்லது உண்மையான வாகன பதிவெண்ணா என்பதை எச்சரிக்கை செய்யும்.
கொலை, கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களின் பதிவு எண்கள் கண்டறியப்பட்டால், IVMS மூலம் உடனடி எச்சரிக்கைகளை உருவாக்கும்.
நிவாரண செயலி
சென்னை காவல்துறையில் காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணையதளம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ‘நிவாரண செயலி’ தொடங்கப்பட்டுள்ளது. புகார் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
மூத்த குடிமக்களை பாதுகாக்கும் ‘பந்தம்’
சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் மூத்த குடிமக்களின் விபரங்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், அவசர தேவைகளுக்கு மூத்த குடிமக்கள் காவல்துறையின் கட்டணமில்லா 9499957575 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
மாறும் சூழ்நிலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சென்னை காவல்துறையும் தனது செயல்பாடுகளை அப்டேட் செய்துகொள்வது பாராட்டத்தக்க செயல்தான்!