மதுரையில் திறக்கப்பட்ட தமிழ் இனத்தின் மகத்தான பண்பாட்டுச் சின்னம்… ஏறுதழுவுதல் அரங்கத்தின் சிறப்புகள் என்ன?
மதுரை கீழக்கரையில், தமிழ் இனத்தின் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்த நிலையில், இந்த அரங்கம் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கென புகழ்மிக்கதாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் போன்ற மதுரை கிராமங்கள் இருக்கின்றன. இதனை கருத்தில்கொண்டே ஜல்லிக்கட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில், 62.78 கோடி ரூபாய் மதிப்பில், 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்கினர்.
அரங்கத்தின் சிறப்புகள்…
வாடிவாசலுடன், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், விஐபி-கள் அமரும் இடம் என 83,462 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமான கட்டடமாக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், மருத்துவமனை, கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டு, ஜல்ல்லிக்கட்டுப் போட்டிக்கென்றே வரலாற்றில் முதன்முறையாக இந்த ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு லீக் போட்டிகள்
சங்க இலக்கிய பாடல்களில் தனிச் சிறப்புடன் இடம்பெற்ற ஏறுதழுவுதல் எனும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இனி பொங்கல் விழாவையொட்டி மட்டுமல்லாமல், இந்த அரங்கத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு லீக் போட்டிகள் நடைபெறும். இதனால், மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனத் தமிழக அரசின் சுற்றுலாத் துறை எதிர்பார்க்கிறது.
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கென்றே இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு லீக் போட்டிகளில் மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறாத நாட்களில் இந்த அரங்கம், பல்வேறு கலாச்சார மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கென்றே தனி அரங்கம் கட்டுப்பட்டுள்ளதால் பொங்கலையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து அங்கேயே நடைபெறும்.