திமுக மாநாட்டில் உதயநிதி சொன்ன குட்டி கதை!

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில எழுச்சி மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக-வின் சமத்துவக் கொள்கையை விளக்கும் வகையில், ஒரு தாத்தாவுக்கும் சிறுவன் ஒருவனுக்கும் இடையேயான உரையாடல் மூலம் சொன்ன குட்டி கதையை மாநாட்டுக்கு வந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.

உதயநிதி சொன்ன அந்த குட்டி கதை இதுதான்…

“ஒரு ஊரில் சிறுவன் இருந்தான். அவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் ரொம்ப ஆர்வம். அவனோடு யாரும் ஓடி அவனை ஜெயிக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஒரு தடவை ஊரில் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஒரு வயதான முதியவர் ஒருவர் அந்தப் போட்டியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மற்ற எல்லோரையும் விட அந்த சிறுவன் வேகமாக ஓடி வெற்றி பெற்றான். எல்லோரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

மீண்டும் ஒரு போட்டி நடந்தது. அவனைவிட சற்று வயது அதிகமுள்ள குழந்தைகள் கலந்துக் கொண்ட அந்தப் போட்டியிலும் இந்த சிறுவனே வேகமாக ஓடி முதல் பரிசைப் பெற்றான். மக்கள் மீண்டும் அந்த சிறுவனுக்காக கைத்தட்டினார்கள். அந்த முதியவர் மட்டும் அமைதியாக இருந்தார். அந்த முதியவரிடம் சென்று அந்த சிறுவன் கேட்டான், ஏன் நீங்கள் மட்டும் எனக்கு கைத்தட்ட மாட்டேங்குறீங்க என்று கேட்டான்.

அதற்கு அந்த முதியவர், அந்த கிராமத்தில் இருந்த வேறு இரண்டு சிறுவர்களோடு உன்னால் ஓடி ஜெயிக்க முடியுமா என்று கேட்டார். அதில் ஒரு சிறுவன், சத்தான உணவில்லாமல் வாடும் ஏழைவீட்டுப் பையன். மற்றொரு சிறுவன், கண்ணொளி இல்லாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இரண்டு பேரையும் உன்னால் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்.

இப்போது பாருங்கள் என்று சொல்லி வேகமாக ஓடி முதல் ஆளாக வெற்றிக் கோட்டைத் தொட்டான் அந்த சிறுவன். மற்ற இரண்டு சிறுவர்களும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இதனைப் பார்த்த மக்கள் கூட்டம், வெற்றிபெற்ற அந்த சிறுவனுக்கு கைத்தட்டவே இல்லை. அந்த சிறுவன் தாத்தாவிடம் போய்க் கேட்டான். ஏன் யாரும் கைத்தட்டவில்லை?

அந்த தாத்தா சொன்னார், இப்போது மீண்டும் ஓடு. ஆனால், இந்த தடவை மற்ற இரண்டு சிறுவர்களுடைய கைகளையும் பிடித்துக் கொண்டு சேர்ந்து ஓடு என்று சொன்னார். அதே மாதிரி, அந்த சிறுவனும் மற்ற இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சீராக ஓடினான். மூன்று பேரும் ஒன்றாக வெற்றிக் கோட்டைத் தொட்டார்கள். இதைப் பார்த்த, மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

இப்படிப்பட்ட வெற்றி தான் திமுகவின் வெற்றி ! யார் யாரெல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நாங்கள் ஓடுகிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். அச்சுறுத்தப்படும் கைகோர்த்து பெரும்பான்மையின் பேரால் சிறுபான்மை மக்களோடு ஓடுகிறோம், கைகோர்த்து மாற்றுத்திறனாளிகளோடு ஓடுகிறோம். மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படுகிற திருநங்கை, திருநம்பிகளோடு கைகோர்த்து ஓடுகிறோம், காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். எந்தவொரு பாதிக்கப்பட்ட மக்களையும் விட்டுவிடாமல் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஓடுகிறோம்.

எல்லோரும் சேர்ந்து தான் வெற்றிக் கோட்டை தொட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் திமுகவின் தேர்தல் வெற்றியை ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியாகப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் திமுக வெற்றிபெறும் போதெல்லாம், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது” என அமைச்சர் உதயநிதி சொன்ன இந்த கதையை மாநாட்டுக்கு வந்த திமுகவினர் வெகுவாக கைதட்டி ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft cans 1,900 employees from xbox gaming divisions. Raven revealed on the masked singer tv grapevine. Fethiye motor yacht rental : the perfect.