திமுக இளைஞரணி மாநாடு: அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறதா திமுக?
திமுக-வை நெருக்கடிகள், சோதனைகள் சூழ்ந்தபோதெல்லாம் கட்சியினரை உற்சாகப்படுத்தவும் வழிகாட்டவும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை அறிவித்துவிடுவார் அக்கட்சியின் முன்னாள் தலைவரான கலைஞர் கருணாநிதி.
தற்போது திமுக ஆளும் கட்சி. கலைஞர் இல்லை. ஆனாலும் சோதனைகள் தொடர்கின்றன. ஒன்றிய அரசால் ஆளுநர்கள் மூலமாகவும், எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு, விவாதம் ஏதுமின்றி அவசர கோலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் மூலமாகவும் நெருக்கடிகளும் சோதனைகளும் ஆளும் திமுக-வை மட்டுமல்லாது, இந்த தேசத்தையே சூழ்ந்து நிற்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் தான், அபகரிக்கப்படும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் முழக்கத்துடன் வருகிற 21–ஆம் தேதி சேலத்தில், ‘திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டின் நோக்கம்
இந்த மாநாட்டின் நோக்கம் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்த சேலத்தில் இளைஞரணியின் மாநாடு நடைபெறவிருக்கிறது” என்று தெளிவாகவே கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, 2007 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான், நெல்லையில் அன்றைய இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.
சேலத்தில் நடத்துவது ஏன்?
“திமுக-வைப் பொறுத்தவரை சேலத்துக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த காலங்களில் திமுக-வின் பல முக்கிய நிகழ்வுகளில் முதன்மை பெற்றது சேலம் மாநகரம். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 2 ல் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையை மாற்ற, மேற்கு மண்டலத்தில் திமுக-வை வலுப்படுத்துவது அவசியமாகிறது. அதையும் கருத்தில்கொண்டே இந்த மாநாடு சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் நிலையில், இந்த ஆண்டில் விரைவில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலையும் அவர் பொறுப்பேற்று நடத்த வாய்ப்பு உள்ளது” என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் உள்ளது.
திமுக-வின் அடுத்தகட்ட பாய்ச்சல்
இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், உதயநிதி, இளைஞரணி செயலாளர் ஆனபிறகு ஏராளமான இளைஞர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக வாய்ப்பு கிடைத்தது. ஒரு துணைச் செய்லளராக இருந்ததை 9 துணைச்செயலாளராக உயர்த்தி கட்டமைப்பை உருவாக்கினார்.1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இளைஞரணியில் பதவி கொடுத்துள்ளார். மாநாட்டுக்காக 23 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை சிறப்பாக செயல்பட்டுள்ளன. இளைஞரணியில் 25 லட்சம் பேரை புதிதாக சேர்த்தார். நாலரை லட்சம் பேருக்கு பதவி கொடுத்துள்ளார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது, மாநாட்டுக்குப் பின்னர் திமுக-வில் மேலும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அக்கட்சி தயாராகும் எனத் தெரிகிறது.