தமிழ்நாடு “ஸ்டார்ட் அப்” இல் டாப்!
புத்தாக்கத் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டிற்கான புத்தாகத் தொழில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தமிழ்நாடு பெற்றள்ளது.
புத்தாக்கத் தொழில்துறை தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று முதலிடத்தில் வருவதற்கு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள்தான் காரணம். ‘ஸ்டார்ட் அப் டிஎன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் புத்தாக்கத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
அதே போல் ஸ்டாட்அப் சீட் பண்ட் (TANSEED) எனப்படும் புத்தாக்கத் தொழில் விதை நிதி, எமர்ஜிங் செக்டார் சீட் பண்ட் (Emerging Sector Seed Fund) எனப்படும் வளர்ந்து வரும் துறைக்கான விதை நிதி, தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி நிதி என தொழில்களுக்குத் தேவையான நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரையில் 7 ஆயிரத்து 600 புத்தாக்கத் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 2022ம் ஆண்டில் மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 250க்கும் மேற்பட்ட புத்தாக்கத் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 140க்கும் மேற்பட்ட புத்தாக்கத் தொழிலுக்கு உரிமையாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி உதவி மட்டுமல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களையும் தமிழ்நாட்டு புத்தாக்கத் தொழில் முனைவோரையும் இணைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டார்ட்அப் டிஎன் எடுத்துவருவதாக அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா கூறுகிறார்.
புத்தாக்கத் தொழில்களுக்கான கொள்கை ஒன்றை 2023ல்தான் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பே புத்தாக்கத் தொழில்களை வளர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடங்கி விட்டது என்று அவர் கூறுகிறார். 2032ம் ஆண்டுக்குள் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் 20 புத்தாக்கத் தொழில் மையங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் தங்களின் இலக்கு என்று சிவராஜா கூறுகிறார்.
புத்தாக்கத் தொழில்களுக்கு ஆதரவு, நிதி உதவி, தொழில் முனைவரின் திறன் வளர்த்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு 100 பெர்சன்ட்டைலைப் பெற்றிருக்கிறது.
2022ம் ஆண்டில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 60 விதமான ஒர்க் ஆர்டர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனங்கள் பெற்றுள்ளன. புத்தாக்க நிறுவனங்களிடம் இருந்து அரசுத் துறைகளும் பொதுத் துறைகளும் குறிப்பிட்ட சதவித்தில் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது புத்தாக்கத் தொழில்களை வளர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கை.