கேலோ இந்தியா போட்டிகள்… தயாராகும் தமிழகம்… ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்’, ஜனவரி 19 முதல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, அவர்களை ஆதரிக்கும் நோக்கத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ( Khelo India Youth Games),கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இது, இளம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தங்கள் திறமைகளையும், உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கனவுகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
நான்கு மாவட்டங்களில் போட்டி
அந்த வகையில் இந்த ஆண்டு, நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி, தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளது. ஜனவரி 19 முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில், களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும், கூடைப்பந்து மற்றும் தாங்-டா விளையாட்டுகள் கோயம்புத்தூர் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டுகள் மதுரை மாநகரிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரிலும் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் (NSF) உடன் இணைந்து போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில், மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 6,500 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் மற்றும் 1600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகள் தீவிரம்
இந்த நிலையில், கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறும் விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாட்டு பணிகளை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அந்த விளையாட்டரங்கத்தில் புதிதாக அமைக்கப்படும் செயற்கை ஓடுதளம் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமைத்தேடி தரவுள்ளதாகவும், இதனால் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.