‘ஒரு லட்சம் கோடி டாலர் இலக்கு தமிழகத்துக்கு சாத்தியம் தான்!’- நம்பிக்கையும் காரணங்களும்…
‘தமிழக அரசால் ஒரு லட்சம் கோடி டாலர் இலக்கை நிச்சயம் எட்ட முடியும்’ என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பினரும் பெரும் தொழில் நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அதற்கான காரணங்களையும் விளக்கி உள்ளனர்.
தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் ( ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் இந்த மாநாடு குறித்துப் பேசுகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளபடி, “ஒரு லட்சம் கோடி டாலர் இலக்கை தமிழ்நாடு அரசால் நிச்சயம் எட்ட முடியும்” என நம்பிக்கை தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களையும் தெரிவித்தனர்.
டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன்
“வேலைவாய்ப்புகளை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு உதவும். சிறந்த அரசியல் தலைமை, சிறந்த நிர்வாகம், அமைதியான சட்டம் ஒழுங்கை தமிழ்நாடு கொண்டுள்ளது. நாட்டிலேயே திறன்மிக்க தொழிலாளர்கள், பொறியாளர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளனர் அதனால்தான், சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி அதிகளவில் வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ரூ.2.7 லட்சம் கோடி முதலீடுகளில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்க சிறந்த தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமைகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமைக்கும், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நன்றி.”
இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ்
“ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டும். உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு துணை நிற்கும்.”
‘ஓலா’ எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால்
“நவீன தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஈடுபாடு செலுத்தி வருகிறது. மின் வாகன உற்பத்திக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு பாராட்டும்படி உள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கல் நாட்டி 8 மாதங்களில் இரு சக்கர வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளோம். எங்களது ஓலா நிறுவனத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்.
இந்தியாவில் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளோம். ஆட்டோ மொபைல் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.”
ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம்
“தமிழ்நாடு அரசிற்கும், ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்ட கால தொழில்நுட்ப உறவு உள்ளது. 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்.”
ஏ.பி. மோலர் மெர்ஸ்க் நிறுவனம் – ரெனேபில் பெடர்சன்
“எங்கள் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நீண்ட உறவு உள்ளது. தமிழ்நாட்டில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலரை எட்ட நாங்கள் உறுதுணையாக இருப்போம்.”
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிசாபா கோத்ரெஜ்
“கோத்ரெஜ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது. இந்தியாவில் உள்ள பெண் தொழிலாளர்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.”
ஜே.எஸ்.டபிள்யூ. நிர்வாக இயக்குநர் சஜ்ஜன் ஜிண்டால்
“இந்தியாவிலேயே மிக அதிகம் தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் மொத்த மின்வாகன உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
“நாடு முழுவதும் உள்ள காற்றாலை மின் உற்பத்தியில் 3–ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில் உள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் நடத்துவதற்கான சூழ்நிலை பாராட்டுக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டில் எங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யும் உருக்கு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தியில் எங்களது நிறுவனம் கூடுதல் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அரசால் விரைவில் எட்ட முடியும்.” இவ்வாறு அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பெரும் தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ள இந்த நம்பிக்கை, சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியாகவே கருதப்படுகிறது எனலாம்!