‘உயர்கல்விப் பூங்கா’வாக தமிழ்நாடு: சாதனைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர்!
திருச்சி பாரதிதாசன் 38 ஆவது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்கள்.
“எங்கள் வாழ்வும் – எங்கள் வளமும் – மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்ற என்ற பாரதிதாசன் வரிகளோடு தனது பேச்சை ஆரம்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்னார்தான் படிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது தமிழ்நாடு என்று பெருமிதப்பட்டார். பிறகு உயர்கல்வித்துறையில் தமிழ்நாட்டின் சாதனைகளை பட்டியலிட்டார்.
“பெண்கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குள் நுழையும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய்.
‘நான் முதல்வன்‘ திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி. ஒரு வருடத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.
தொழில்கல்வி கற்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் 28 ஆயிரத்து 749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு 482 கோடி ரூபாய் செலவிடுகிறது.
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.
பி.எச்.டி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.
இந்தியாவின் தலைசிறந்த 100 கலை – அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் உள்ள 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதல் இடம்.
இப்படி தமிழ்நாட்டின் பெருமைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களிடம் தந்தையின் உணர்வோடு, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் புகழ் சேருங்கள் என்று வேண்டுகோள் வைத்து, தனது உரையை நிறைவு செய்தார்.