திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… என்னென்ன வசதிகள்..? இணைப்பு பேருந்துகள் விவரம்…
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இப்பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன, கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் இணைப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இதுவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களையொட்டி அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வந்தது.
இதனை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி அசைத்து திறந்து வைத்தார்.
இன்று முதலே தென்மாவட்டங்களுக்கு இயக்கம்
இதனையடுத்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் SETC,TNSTC,PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் பொங்கல் விடுமுறைக்கும் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள், இனி விரைவாக பயணிக்க முடியும். அதே சமயம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று நகரின் மத்தியில் இல்லாமல், புறநகரில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருப்பதால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு செல்லவும், அங்கிருந்து நகருக்குள் வரவும் இணைப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இணைப்புப் பேருந்துகள் விவரம்
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வண்டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்புப் பேருந்துகள். கிளம்பாக்கம்-கோயம்பேடு இடையே 70V பேருந்து. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிட இடைவெளியில் 70V, 70C, 104CCT பேருந்து. கிளாம்பாக்கம்-தாம்பரம் இடையே 55V பேருந்து.
கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கம்-வேளச்சேரி இடையே 91R பேருந்து.
கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 15 நிமிட இடைவெளியில் 91R எண் கொண்ட பேருந்து. கிளாம்பாக்கம்-கிண்டி இடையே 15 நிமிட இடைவெளியில் 18ACT பேருந்து. கிளாம்பாக்கம்-திருவான்மியூர் இடையே 95X பேருந்து. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 8 நிமிட இடைவெளியில் 95X எண் கொண்ட பேருந்து.
கிளாம்பாக்கம்-அடையாறு இடையே 99X பேருந்து. கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 15 நிமிட இடைவெளியில் 99X எண் கொண்ட பேருந்து.
கிளாம்பாக்கம்-பிராட்வே இடையே 21G பேருந்து. கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 10 நிமிட இடைவெளியில் 21G எண் கொண்ட பேருந்து.
என்னென்ன வசதிகள்?
ரூ.394 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயன் பெறுவர். பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, 4 பெரிய உணவகங்கள், 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் 12 இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வசதி, 540 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் 2 கீழ் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் முதல் தளம் கட்டப்பட்டுள்ளது. 2 ஆவது தளத்தில் 84 கார்கள் மற்று 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன. 1,200 மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணியும் நிறைவு பெற்றுள்ளது.
பயணிகள் தங்க 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் (Dormitory) ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ‘பிரெய்லி’ பலகைகள் வைக்கப்படுகின்றன. கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
மெட்ரோ ரயில்
ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர்தான். அது போல் விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.