88 ஏக்கர்… ரூ.400 கோடி… கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் சிறப்பு வசதிகள் என்னென்ன..?
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், வருகிற 30 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால், அது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 110 ஏக்கர் நிலப்பரப்பில், 88 ஏக்கரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நவீன பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்…
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் ஏன்?
சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் தற்போதைய கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஆனாலும், பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வந்தது.
அதிலும் தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகள், கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஊர்ந்து சென்று சொந்த ஊர்களுக்குப்போய்ச் சேருதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையும் அருகிலேயே இருப்பதால், இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. இங்கிருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, செங்கோட்டை மற்றும் தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
டிச. 30-ஆம் தேதி திறப்பு
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பேருந்து நிலையத்தின் பணிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி, ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், வருகிற 30-ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்..?
சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும். இங்கு 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.1,200 மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணியும் நிறைவு பெற்றுள்ளது.
சிசிடிவி கேமராக்கள், முழுவதும் குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்துகள் நிறுத்துமிடங்கள்உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அது போல், இந்த பேருந்து நிலையத்தை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில்
ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர்தான். அது போல் விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் தென் புறநகர் பகுதியினர் பயனடைவர், மேலும் 2025 ல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ‘பிரெய்லி’ பலகைகள் வைக்கப்படுகின்றன. கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு நிம்மதியாக பயணம்
இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இப்பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், இந்த முறை தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.