குளிர் காலம் வந்துடுச்சி… உடலை கத கதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள் இதோ..!
“எங்கள் ஊர் எல்லைக்கு அருகில் தான் ஊட்டியும், கொடைக்கானலும் இருக்கின்றன’ என்று நாமும் வேடிக்கையாக பேசும்படி மார்கழி மாதம் அமையும். நாளை முதல் மார்கழி மாதம் தொடங்குகிறது. ஆண்டின் பிற நாட்களில் வெயிலும், உஷ்ணமும் நம்மை வாட்டி வதைக்கும் என்றாலும், இந்த மார்கழி மாத குளிர் கொஞ்சம் அனுபவிக்க ஆனந்தமாக தான் இருக்கும்.
எனினும், நம் உடலை நடுங்கச் செய்யும் குளிரில் இருந்து கொஞ்சமாவது தற்காத்துக் கொண்டால் தான் இரவில் நிம்மதியாக உறங்க முடியும். குளிர் காலத்தில் நல்ல தூக்கம் என்பது கொஞ்சம் சிரமம் தான். ஏனென்றால் நம் உடல் வெப்பத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டியிருக்கும். இதற்காக நாம் அடர்த்தியான பைஜாமா மற்றும் இதர கனமான ஆடைகளை அணிந்து கொள்வோம். ஆனால், சிறிது நேரத்திலேயே வெப்பம் அதிகரித்து, வியர்க்க தொடங்கி விடும்.
ஆக நடுநிசியில் நமக்கு விழிப்பு வந்தால் கூட ஆச்சரியமில்லை. அதே சமயம் டார்க் சாக்கலேட், பூண்டு, ஓட்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் நம் உடலுக்கு போதுமான வெப்பம் கிடைக்கும். அதன் மூலம் இரவில் நிம்மதியாக உறங்கலாம்,
மிகச் சரியான வெப்பநிலை என்ன?
நாம் தூங்குவதற்கு மிகச் சரியான வெப்பநிலை என்பது 18.3செல்சியஸ் ஆகும். எனினும், தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து இந்த வெப்பநிலை மாறுபடலாம். அதே சமயம், 20 டிகிரி செல்சியஸ் என்பதுதான் அதிகபட்ச வெப்பநிலையாக இருக்க முடியும்.
இரவில் தூங்குவதற்கு ஒன்றுக்கு, இரண்டாக போர்வைகளை போர்த்திக் கொள்ளாமல், மிக இறுக்கமான ஆடைகளை அணியாமல், எப்போதும் போல தளர்வான உடைகள், ஒற்றை போர்வையுடன் நாம் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், உடல் வெப்பத்தை அதிகரிக்கும் வகையில் கீழ்காணும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
கொழுப்பு வகை மீன்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட மீன் வகைகள் அனைத்துமே நம் உடலில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, தேவையான வெப்பத்தை கொடுக்கும். சால்மன் என்னும் காள கெண்டை, மத்தி, கானாங்கெளுத்தி, மடவா கெண்டை போன்ற கொழுப்புச்சத்து கொண்ட மீன்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
வேர் காய்கறிகள்
கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகளை இரவில் சாப்பிட்டோம் என்றால், உடலுக்குத் தேவையான வெப்பநிலையைப் பெற முடியும்.
வாழைப்பழம்
உணவு செரிமானத்திற்காக, இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் எப்போதுமே இருக்கும் என்றாலும், குளிர் காலத்திலும் அதை தவறாமல் செய்ய வேண்டும். இதில் உள்ள மெக்னீசியம் சத்து நமக்கு இதமான நிலையை கொடுக்கும்.
சூடான பால் அல்லது மூலிகை டீ
ஒரு கிளாஸ் அளவு சூடான பால் குடித்தால் நம் உடல் ரிலாக்ஸ் அடையும் மற்றும் உடனடியாக தூக்கம் வரும். புதினா டீ, செம்பருத்தி டீ போன்ற மூலிகை டீ அருந்துவதும் உடலுக்குத் தேவையான வெப்பநிலையை கொடுக்கும்.
குளிர்காலத்தில் உங்களை சூடாக மற்றும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று நட்ஸ். அதோடு சீசன் முழுவதிலும் ஆரோக்கியமாக இருக்க பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
அப்புறம் என்ன மக்களே… இந்த மார்கழி மாத குளிரை மேற்கூறிய டிப்ஸ்களுடன் ஆனந்தமாக அனுபவிங்க..!