பிக்பாஸில் விசித்ரா வீசிய குண்டு … என்ன செய்யப் போகிறார் கமல்ஹாசன்?
விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா, அவரது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயம் ஒன்றைப் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை விசித்ரா “குக்வித் கோமாளி’ ஷோ மூலம் நல்ல பிரபலமாகி, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் 7 ஆவது சீசனில் நடிகை விசித்ரா முக்கிய போட்டியாளராக இருந்து, நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். நேற்று 51 ஆவது எபிசோடில், ‘பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றிக் கூற வேண்டும்’ என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் நடிகை விசித்ரா பங்கேற்று பேசியபோது, ‘தான் ஏன் திரையுலகில் இருந்து விலக நேர்ந்தது’ என்பதற்கான அதிர்ச்சி காரணத்தை கூறினார். “எல்லாருக்கும் என்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய தகவல்கள் தெரியும். 2001 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு நான் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தேன். நான் நடிப்பிலிருந்து விலகி இருந்ததற்கு உண்மையான காரணத்தை மறக்க நினைக்கிறேன். அது யாருக்கும் தெரியாது. அந்த சமயத்தில் அது மிகப்பெரிய விஷயமாக மாறியது. அந்த சம்பவம் என் மனதில் மிகப்பெரிய காயமாக உள்ளது…” எனப் பேச ஆரம்பித்தார்.
தொடர்ந்து பேசிய விசித்ரா, “ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ என்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், ‘இந்த படத்துல தான நடிக்கிற நீ..? என் ரூமுக்கு வா’ என்று மட்டும் கூறி அழைத்தார். அன்று இரவு எனது ரூமுக்குச் சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள். மாலையானாலே, குடித்துவிட்டு வந்து அறைக் கதவைத் தட்டுவார்கள். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர்” எனக் கூறி இருக்கிறார்.
மேலும், “ அன்றைய நாளிலிருந்தே ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு பிரச்னைகள் நடக்கத் தொடங்கின. சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் அவர் குடித்துவிட்டு வந்து ரூம் கதவை தட்டும் சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு அந்தச் சூழல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படி நாம் சமாளிக்க போகிறோம் எனத் தெரியாமல் தவித்தேன்” என விசித்ரா கண்ணீருடன் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல், “ வ்சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்தது எனக்கு தெரியாது. மறுநாள் வழக்கம்போல் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். ஸ்டன்ட் மாஸ்டர், ஃபைட்டர்ஸ் என எல்லாரும் வந்து விட்டார்கள். அது கிராமத்தில் நடக்கும் காட்சி. ஃபைட்டர்ஸ் உள்ளே வர கிராம மக்கள் சிதறி ஓடுவது போல காட்சியை நீங்கள் சினிமாவில் நிறைய பார்த்திருக்கலாம். அது மாதிரி எடுக்கப்பட்ட காட்சியின் போது ஒருவர் என்னை தகாத முறையில் தொடுவதை உணர முடிந்தது. இரண்டாவது முறையும் இதுபோல நடக்க, மூன்றாவது முறை நடந்த போது அவரின் கையைப் பிடித்து விட்டேன். நேராக ஸ்டன்ட் மாஸ்டரிடம் அழைத்துச் சென்று நடந்ததை சொன்னேன்.
ஆனால் அவரோ என்னிடமிருந்து அந்த ஃபைட் மாஸ்டரை விடுவித்துவிட்டு என் கன்னத்தில் ஒரு அறை விட்டார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்ன காரணத்திற்காக அவர் என்னை அடித்தார் எனத் தெரியாமல் வெளியே கண்ணீருடன் வெளியே வந்து நின்றேன். நடந்த சம்பவங்களை எனது பெற்றோரிடம் கூற முடியவில்லை. அதனால் என் ஃப்ரண்டுக்கு போன் செய்து, ‘இப்படி நடந்து விட்டது… என்ன செய்யலாம்?’ எனக் கேட்டேன். அவரோ, ‘இதனை சும்மா விட வேண்டாம்… புகார் அளிக்கலாம்’ எனச் சொன்னார்.
உடனடியாக நான் அப்போது இருந்த நடிகர் சங்கத்திடம் இது தொடர்பாக தெரிவித்தேன். அங்கிருந்த தலைவர்கள் புகாரை கைப்பட எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்துவிட்டு, ‘அந்த படத்தில் வேலை செய்ய வேண்டாம் திரும்பி வந்துவிடுங்கள்…’ எனக் கூறினார்கள். எனக்கு இந்த விவகாரத்தில் பெரிய வருத்தம் என்னவென்றால், அந்த சம்பவம் மிகப்பெரிய விஷயமாக நியூஸ் பேப்பரில் எல்லாம் வந்தது. ஆனால் எனக்காக யாரும் வந்து பேசவில்லை. குறிப்பாக ஒரு கட்டத்தில் அப்போது இருந்த நடிகர் சங்க செயலாளர் என்னிடம், ‘நீங்கள் ஏன் போலீசுக்கு செல்லாமல் இங்கு வந்தீர்கள்..?’ எனக் கேட்டார்” என்று விசித்ரா கூறி இருப்பது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் சொன்ன அந்த சமயத்தில், ‘விசித்ரா குறிப்பிடும் நடிகர் யார்..?’ எனச் சமூக வலைதளங்களில் விவாதம் அனல் பறக்கிறது. ‘தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் அந்த மூத்த நடிகர் தான் விசித்ரா சொல்லும் ஹீரோவா.. ?’ எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், ‘விசித்ரா புகார் அளித்தபோது நடிகர் சங்கத் தலைவராக யார் இருந்தார்?’ என்ற விவாதமும் பரபரக்கிறது. அதே சமயம் விசித்ரா மீது பிக்பாஸ் ரசிகர்களிடையே அனுதாப அலையும் ஓங்கி வீசுகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கமல்ஹாசன், ‘இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறார்..?’ என்ற கேள்வியுடன் பார்வையாளர்கள் பரபரப்புடன் காத்திருக்கிறார்கள்.