கோத்தாரி கல்விக் கொள்கை: திமுக அரசு செய்த புரட்சியால் முன்னுக்கு வந்த தமிழகம்!
கல்விதான் நல்லதையும், கெட்டதையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஆயுதம். காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுப்பள்ளி முறையை மேலும் வேகப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. 1967-ல் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின் இதன் வேகம் எத்தகைய பாய்ச்சலுடன் இருந்தது என்பதை வரலாற்றை பின்னோக்கி புரட்டி பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞர் கருணாநிதி, உயர்கல்விக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசோ பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டிலுமே தமிழகம் மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
கோத்தாரி கல்விக் கொள்கையும் திமுக அரசும்
1968-ல் மத்திய அரசு கோத்தாரி கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்கவும், 11-ம் வகுப்புடன் முடியும் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது . இந்த கல்வி முறையை பல மாநிலங்கள், கல்லூரி படிப்புடன் சேர்த்து PUC (Pre-University Course) என்ற முறையைக் கொண்டு வந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு இதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனென்றால், கல்லூரி என்பது மிக குறைந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் பள்ளிகள் என்பது அந்நாட்களில் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் இருந்ததால், மாணவர்கள் SSLC முடித்ததும் அப்படியே 12 ஆம் வகுப்பிற்கு சேருவதற்கும், மேல்நிலை கல்வியைக் கற்கவும் வாய்ப்பை உருவாக்கியது. எனவே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேல்நிலை கல்வி கற்றவர்கள் அதிகரிக்க திமுக அரசின் தனித்துவமான முடிவு ஒரு முக்கிய காரணம்.
பல மாநிலங்களில் இன்றும் அரசு பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைகளுக்குச் சென்று சேர பல மாதங்கள் ஆகின்றன. இந்த குறையை 1970- களிலேயே களைந்தவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. 1970 மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு பாடநூல் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகவும், விரைவாகவும் புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த பாடநூல் சங்கம்தான் 1993-ல் தமிழ்நாடு பாடநூல் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இன்றுவரை நடைமுறையில் உள்ளது. தற்போது டிஜிட்டல் முறையில், புத்தகங்களை மீட்டுருவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலவச பஸ் பாஸ்
1956-ல் தமிழ்நாட்டில் தனியாரால் போக்குவரத்து துறை உருவாக்கப்பட்டது. அந்த போக்குவரத்து துறையை 1967-ல் திமுக அரசு பொறுப்பேற்றப்பின், அரசுடைமையாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 1972-ல் தமிழ்நாடு அரசின் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. வண்டிகளே செல்லாத கிராமங்களுக்கு எல்லாம் பேருந்துகள் சென்றன. எனவே கிராமத்தில் உள்ள பிள்ளைகளும் நகரங்களுக்கு வந்து படிக்கத் தொடங்கினர்.
அதே சமயம், பேருந்து கட்டணத்துக்கு வசதியற்ற மாணவர்கள், நீண்ட தூரம் நடந்து வரவேண்டும் என்ற காரணத்திற்காக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடும் சூழல் ஏற்பட்டதை அறிந்த கருணாநிதி, 1989-ல் முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின், இலவச பஸ்பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து கற்கத் தொடங்கினர்.
சத்துணவுத் திட்டம் காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதை எம்.ஜி.ஆர் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தினார். ஆனால் அந்த திட்டத்தை முறைப்படுத்தியவர் கலைஞர். ஏனென்றால் சத்துணவு என்பது சத்துகள் சேர்ந்திருக்க வேண்டும். அந்த உணவில் முட்டையை சேர்த்துக் கொடுத்தால் மட்டுமே மாணவர்களுக்கு சத்தாக அமையும் என்று உணர்ந்தவர் கலைஞர். அதேபோல் முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது.
தொடக்க கல்வி இயக்கங்கள், பள்ளி கல்வி இயக்கங்கள்
‘இந்த இயக்கங்களால் என்ன பலன்?’ என்ற கேள்வி எழலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்க பள்ளி மற்றும் அதை முறைப்படுத்த அலுவலர்கள், தேவையான ஆசிரியர்கள், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் போதுமான கல்விக் கூடங்கள்… என அனைத்தும் கிடைப்பதற்கு இந்த தொடக்க கல்வி இயக்கமே காரணமாக அமைந்தது. 6 லிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக பள்ளி கல்வி இயக்கங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்து பள்ளிக்கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இதை கட்டமைத்தவரும் கலைஞர்தான்.
அவர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலினும் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டிலுமே தமிழகம் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக அரசு மாணவர்களைத் தளரவிடக்கூடாதென்று நீட் தேர்வு மையங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, காலை உணவுத் திட்டம்… என்று கொண்டு வந்துள்ள பல திட்டங்களால், அரசை நம்பி பிள்ளைகளை தாராளமாக பள்ளிக்கு அனுப்பலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள், தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து, அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல மற்றொரு விஷயம் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’. இத்திட்டத்தின் மூலம் கல்வியறிவே பெறாத மக்கள் வாழும் பல கிராமங்களில் பலர் எழுத, படிக்க கற்றுக்கொண்டுள்ளதை தெரிந்துக்கொள்ள முடிகிறது. இப்படி ஒவ்வொரு திட்டமும் ஏதோ ஒரு மாவட்டத்தை, ஏதோ ஒரு ஊரை, கிராமத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது.