ஊடக சுதந்திரமும் டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியும்..!

ன்று தேசிய பத்திரிகை தினம்.. இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான ஊடகங்கள் இருப்பதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று இந்த நாள் ‘தேசிய பத்திரிகை தினமாக’ கொண்டாடப்படுகிறது. ஆனால், பரபரப்பான மற்றும் தவறான தகவல்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய ஊடக உலகில், உண்மையான ஊடக தர்மத்துடன் செயல்படும் ஊடகங்கள் பெரும் சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளன.

ஜனநாயகத்தின் நான்காவது தூணைக் காப்பாற்றும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டு, மறைக்கப்படும் தகவல்களை சாமான்ய மக்களுக்கு கொண்டு செல்வதுதான் ஊடகங்களின் பணி. வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்பிற்கும் இடையே உள்ள நுட்பமான சமநிலையைப் பேணக்கூடிய ஒரு சிக்கலான நிலையில்தான் ஊடக நெறியுடன் செயல்படும் உண்மையான ஊடகங்கள் உள்ளன.

ஒருபுறம், அதிகார மட்டத்தில் மறைக்கப்படும் செய்திகளையும் சமூகத்தில் ஒளிந்து கிடக்கும் தகவல்களையும் பெறுவதில் பொதுமக்கள் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். மறுபுறம், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு தகவல்களைக் கொடுக்கும் ‘சோர்சஸ்’ (sources)களைப் பாதுகாப்பது, தனியுரிமையை மதிப்பது மற்றும் தவறான தகவல் பரவுவதைத் தவிர்ப்பது போன்ற நெறிமுறை சார்ந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

பாதிப்புக்குள்ளாகும் பத்திரிகை சுதந்திரம்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களை அச்சமின்றி எதிர்கொண்ட ‘அம்ரித் பஜார்’ மற்றும் ‘தி இந்தியன் பேட்ரியாட்’ போன்ற பத்திரிகைகளின் வேரடுக்குகளில் உருவானதுதான் இந்திய பத்திரிகைகள். அத்தகைய மரபுகளில் இருந்து பெற்ற தைரியம் மற்றும் சுதந்திரமான செயல்பாடுகள்தான், தேசத்துக்குத் தேவையான செய்திகளையும் தகவல்களையும் வடிவமைத்து தருவதில் முக்கியப் பங்காற்றி, தலைமுறை தலைமுறையாக பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.

இருப்பினும், இந்திய ஊடகங்களின் பாதையில் தடைகள் இல்லாமல் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில், பத்திரிகை சுதந்திரம் பாதிப்புக்குள்ளாகி வருவது பெரும் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்டமைப்பு அனைத்தும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில், ஜனநாயகத்தைக் காப்பதற்காக, அதன் மூலமாக இந்தியாவைக் காப்பாற்றவேண்டிய கடமை நான்காவது தூணாக இருக்கக்கூடிய ஊடகங்களுக்குத்தான் இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகைத்துறை எதிர்காலத்தில் இருக்கும்.

ஆயினும் பத்திரிகையாளர்கள் அரசு தரப்பிலிருந்து மட்டுமல்லாது அரசு தரப்பு அல்லாத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்தும் அதிக மிரட்டலையும் அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தம் உடல்ரீதியான தாக்குதல்கள், சட்டரீதியான மிரட்டல், பொருளாதார நிர்ப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை முதல் பீமாகோரேகன் வழக்கு வரை உதாரணமாக எடுத்துவைக்கலாம். இதில் இந்திய அளவில் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தப்பி பிழைத்துள்ளன.

ஊடக சுதந்திரமும் டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியும்

இவையெல்லாவற்றையும் விட டிஜிட்டல் மீடியாவின் எழுச்சி ஊடக சுதந்திரத்தின் தன்மையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. எந்த ஒரு தகவலையும் சுலபமாக பெறக்கூடிய அளவுக்கு இணையம் ( Internet),தகவலுக்கான அணுகலை ஜனநாயகமயமாக்கி உள்ளது. அதே வேளையில், தவறான தகவல்களும் செய்திகளும், வேகமாகவும் கட்டுப்படுத்தப்படாமலும் பரவக்கூடிய சூழலையையும் அது உருவாக்கியுள்ளது. இதனால், நெறிமுறைகளுடன் இயங்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் மீதான நம்பகத்தன்மையையும் நேர்மையையும் நிரூபிப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், நெறிமுறையான இந்தியப் பத்திரிகைகளும் ஊடகங்களும் மக்களுக்கான ஜனநாயகத்துக்கான ஒரு மீள் சக்தியாகவே செயல்படவும் குரல் கொடுக்கவும் செய்கின்றன. ஜனநாயகத்துக்கான கண்காணிப்பு பணியை அவை செம்மையாகவே ஆற்றுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்களை பதிலளிக்க வைத்தும், விளிம்புநிலை மக்களுக்காக குரல் கொடுத்தும், உணர்வுபூர்வமான பிரச்னைகளை அச்சமின்றி வெளியிட்டும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர்.

எதிர்காலத்திலும் இந்திய ஊடகங்கள் உண்மை, நீதி மற்றும் பொது நலனுக்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, என்றும் மக்கள் காப்பாளனாக செயல்படும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

, addressing multiple stability issues and performance concerns that have plagued the game since its launch. 台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. What to know about a’s first home game in west sacramento.