குவியப் போகும் முதலீடு… ஜொலிக்கப்போகும் கோவையும் குலசேகரப்பட்டினமும்!
விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்புத் தளவாடத் துறைகளின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான முக்கிய மையமாக நமது மாநிலம் உருவெடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது. அதனை அடைவதற்காக பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்பாதை என்ற திட்டத்தை இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி, கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற பிறகு இத் துறைகளில் மாநில அரசின் கவனம் வேகமெடுத்தது. இந்தத் துறைகளுக்கான பிரத்யேகமான தொழிற்கொள்கையை, கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அக்கொள்கையின்படி ஏற்கெனவே தொழிற்சாலை அமைந்துள்ள இடங்கள், உதிரி பாகங்கள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து இடங்கள், தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்பாதைக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டன.
இந்த ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு, 21 மாவட்டங்களில் பாதுகாப்புத் தொழில்துறைக்கான தொழிற்சாலைகள் அமைக்க ஊக்குவிப்பது, விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிப்பது, கவச வாகனங்கள் டேங்க்களைத் தயாரிப்பது, விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பு, ஏவுகணை, ராக்கெட், வெடி மருந்து தயாரிப்பு, சென்சார்கள், ராடார்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு, சிறிய ரக ஆயுதங்கள், ரைஃபிள்கள், கப்பல் கட்டுதல் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில்தான், மேற்கூறிய இந்த இரு துறைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்கான வழிகளை ஆராயும் முயற்சியில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான தமிழக பிரதிநிதிகள் குழு, பெங்களூரில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு திரும்பி இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) உட்பட சுமார் 20 விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்புத் தளவாடத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தியை நோக்கி முன்னேறி வருவதாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ((R&D) முக்கிய மையமாக உருவெடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தக்கவைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இக்கூட்டத்தில் என்ஜின் உற்பத்திக்கான சிறப்பு மையமாக ஓசூரின் திறன் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
முதலீட்டாளர்களை ஈர்த்த ஓசூர், கோவை, குலசேகரப்பட்டினம்
இது, குறிப்பாக தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தளவாடத் துறைகளில் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது. மேலும், கோயம்புத்தூர்-சூலூர் மற்றும் வாரப்பட்டி போன்ற பகுதிகள் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்குத் தகுந்த இடமாக உள்ளதாகவும், அப்பகுதிகளில் போதிய கட்டமைப்புகள் உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தின் மீதான ஈர்ப்பை மேலும் வலுப்படுத்தியது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆளில்லா விமானங்களை சோதனை செய்வதற்கான பிரத்யேக வசதிகள் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ ஆகியவற்றால் உருவாக்கப்பட இருக்கும் விண்வெளித் துறை தொடர்பான தொழில் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன் மூலம் ஓசூர், கோவை, குலசேகரப்பட்டினம் போன்ற பகுதிகள் வருங்காலத்தில் முதலீட்டுகளை குவிக்கவும், அதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமான சாத்தியமான நிலை ஏற்பட்டுள்ளது எனலாம்.